சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும் கைதாவர்!
07 Apr,2020
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பகிர்ந்தார்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இன்று (07) காலை இலங்கை வானொலிக்கு வழங்கிய தொலைபேசி ஊடான செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பெண்ணாவார். இவரும் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பதிவிடுவோர் மட்டுமல்ல அவற்றைப் பகிர்ந்து கொள்வோரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் விடயங்களைக் கண்காணிப்பதற்காக எம்மிடம் தனிப் பிரிவு ஒன்று செயற்படுவதுடன் அனைத்தையும் அந்தப் பிரிவு கண்காணித்து வருகிறது.
இதுதவிர, தவறான தகவல்களைப் பதிவிடுவோர் தொடர்பில் பொதுமக்களும் எமக்குத் தகவல்களை வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.