சிறுநீரக நோய்கள்நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் கொரோனா:
01 Apr,2020
கொரோனா வைரஸ் நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் எனவும் சிறுநீரக நோய்கள் நிர்ப்பீடனக் (நோயெதிர்ப்பு) குறைவுக்கு ஒரு பிரதான காரணம் என்றும் சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் தேவராஜா அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவர் குறிப்பிடுகையில், “இன்று நாட்டிற்குப் பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ள கொரோனா எனப்படும் கொவிட்-19 வைரஸ் பற்றிய பல செய்திகள் சமூக வலைத் தளங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன.
கொரோனா என்பது ஒரு முடிவில்லாத தொடக்கமோ என்று எண்ணும் அளவுக்கு நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது. இது தொடர்பான பல வகையான விழிப்புணர்வுகளும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தாலும் இன்னும் இந்த வைரஸின் பூரண தன்மையையும் தாக்கும் வீரியத்தையும் கட்டுப்படுத்தும் மருந்துகள் பற்றி முடிவு இல்லை.
சுகாதாரப் பிரிவினர் கூறுவது போல ‘வீட்டில் இருங்கள்’ என்பது ஒன்றே கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு முறையாக இருக்கின்றது.
இன்று லொக் டவுன் (Lock Down) மூலம் மக்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான அத்தியாவசியத் தேவைகளுத் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. இதில் முக்கியமான ஒன்றுதான் வைத்திய தேவை.
இன்று பெரும்பாலான தொற்றா நோய்களான நீரழிவு, குருதி அமுக்கம், சிறுநீரக நோய்கள் என்பன கொரோனா எனும் கொடிய நோயினால் மறைக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகள் முக்கியத்துவம் இழந்து வருகின்றன.
எமது நாட்டு மக்களைத் தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்றுதான் சிறுநீரக நோய்கள். இந்த நோய் தந்துகொண்டிருக்கும் அழிவுகளை நாம் இலகுவில் மறந்துவிட முடியாது. இந்த நோய்க்கான பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் இருந்தபோதும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையால் பெரும்பாலானவை ஸ்தம்பித்துள்ளது.
சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் அல்லது இரத்த சுத்திகரிப்பு முறைகள் (Dialysis) தொடர்ச்சியாக நீண்டகாலம் தடையின்றி பின்பற்றப்பட வேண்டும். சீரான முறையில் மருந்துகள் உட்கொள்ளாத பட்சத்தில் சிறுநீரகங்கள் விரைவில் தொழிற்பாட்டை இழந்துவிடும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மிகக் குறைந்த மனித வளத்திலும் அரச வைத்தியசாலைகள் தமது அன்றாட கிளினிக் வசதிகளை வழங்கிவருகின்றன. எனவே சிறுநீரக நோயாளர்கள் தங்களது பிரேதச வைத்தியசாலைகளை அணுகி தங்களது மருந்துகளைத் தொடர்ச்சியாகப் பெறுவதுடன் இரத்த மாற்று முறைகளையும் பின்பற்றுவது அவசியமாகும்.
உங்கள் கிளினிக் புத்தகத்தை, வைத்திய சான்றிதழ்களைக் காண்பிப்பதன் மூலம் ஊரடங்கு வேளையிலும் இந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கொரோன வைரஸ் நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் என்பதும் சிறுநீரக நோய்கள் நிர்ப்பீடன குறைவுக்கு ஒரு பிரதான காரணம் என்பதும் உண்மையாகும். எனவே தொடர்ச்சியாக சிறுநீரக நோய்க்கான மருந்துகளைப் பாவிப்பதன் மூலம் உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவ ஆலோசனையை பெறவிரும்பினால் kingsnhs2012@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.