பயணிகள் விமானங்கள் உள்நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீடிப்பு!
29 Mar,2020
இலங்கைக்குள் பயணிகள் விமானங்கள் உள்நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை இந்தப் பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், முன்னதாக எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பயணிகள் விமானங்களுக்கு உள்நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டே, அதனை தொடர்ந்தும் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கையிலுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளை அழைத்துச் செல்லல், சுற்றுலாப் பயணிகளை மீள அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவசர திசைதிருப்பல்கள், சரக்கு விமான சேவைகளை முன்னெடுத்தல், தொழிநுட்ப விடயங்களை கருத்திற் கொண்டு விமானங்களை தரையிறக்குதல் போன்ற நடவடிக்கைளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.