கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி இரு தமிழ் குடும்பத்தினர் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல்!
28 Mar,2020
கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் பணியாற்றியவர்களை தத்தம் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையானது நேற்று(வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை, அனுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டு அவர்கள் தொடர்பிலான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவரவர் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் செயற்பாடானது முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில் நிர்க்கதியான இரு தமிழ் குடும்பத்தினர் கொழும்பில் இருந்து பொலிஸாரின் பாதுகாப்புடன், நேற்று இரவு 8.00pm அளவில் திருகோணமலை – ஈச்சிலம்பற்று பகுதிக்கு சென்ற போது அப்பகுதி மக்களால் அவர்கள் வந்த வாகனமானது தாக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த குடும்பத்தினர் அவர்களது வீட்டுக்கு செல்லமுடியாத நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் இக்காலத்தில் இவ்வாறான குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்