கொரோனாவுக்கு பலியான முதல் இலங்கையர் - ஐரோப்பாவில் வசிக்கும் தமிழர்
27 Mar,2020
கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை பிரஜையொருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த 59 வயதான சதாசிவம் லோகநாதன் என்ற தமிழர் ஒருவரே சுவிட்சர்லாந்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு குறிப்பிடுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கையர் ஒருவர் இத்தாலியில் உயிரிழந்துள்ளதாக இதற்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தது.
எனினும், அந்த நாட்டுக்கான தூதுவராலயத்தின் பதில் கொன்சியுலர் ஜெனரல் பிரபாஷினி பொன்னம்பெருமவிடம் பிபிசி தமிழ் வினவியது.
இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் உயிரிழக்கவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், இத்தாலியில் இதற்கு முன்னர் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கையர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன், அவர் பூரண குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியிருந்தார்.
அதேபோன்று பிரான்ஸில் கோவிட்-19 தொற்றுக்குள்ளான இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், கோவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கையர் ஒருவர் பிரான்ஸ் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு குறிப்பிட்டிருந்தது.
இலங்கையில் இதுவரை காலம் கொரோனா தொற்றுக்குள்ளான 106 பேர் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன், அவர்களில் 7 பேர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளனர்.
கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்
முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil
99 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 238 பேர் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
4000திற்கும் அதிகமானோர் கைது
கோவிட் -19 வைரஸ் தொற்றை இல்லாதொழிக்கும் நோக்கில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 4018 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 20ஆம் தேதி மாலை 6 மணி முதல் இன்று (27) அதிகாலை 6 மணி வரையான காலம் வரை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
அதுமாத்திரமன்றி, சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 1033 வாகனங்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.
வெட் வரி செலுத்த கூடுதல் அவகாசம்
2020ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான பெறுமதி சேர் வரி (வெட் வரி) யை செலுத்துவதற்கு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.
குறித்த இரண்டு மாதங்களுக்குமான வெட் வரியை செலுத்த வழங்கப்பட்டுள்ள காலத்திற்குள் குறித்த கொடுப்பனவு செலுத்தப்படுமாயின், அதற்கான தண்டப்பணம் அறவிடப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிடுகின்றது.