கொரோனா – 3500 பேர் 45 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில்
23 Mar,2020
தற்போது 45 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 3500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கோவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 31 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 82 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட ஒருவரும் உள்ளடங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொற்றாளர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு!
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 222 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம் – மீண்டும் நண்பகல் அமுலாகின்றது!
நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களும், கொழும்பு, புத்தளம், கம்பஹா ஆகிய பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளிலேயே இன்று(திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீண்டும் நண்பகல் 2 மணி முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் மக்கள் சன நெரிசல் நிறைந்த பகுதிகளில் கூடுவதை முடிந்தவரை குறைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதேபோன்று குறித்த காலப்பகுதியில் மதுபானசாலைகளை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தடையினை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களும், கொழும்பு, புத்தளம், கம்பஹா ஆகிய பிரதேசங்களில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் நண்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் வட மாகாணத்தில் உள்ள மக்கள் தங்களது பிரதேசங்களை விட்டு வெளியேறத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸில் இருந்து வருகை தந்திருந்த மதபோதகரை தனியறையில் சந்தித்த ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவரால் நடாத்தப்பட்ட மத வழிபாட்டில் பங்கேற்றவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.