பிரதமர் மஹிந்த கூறுவது அப்பட்டமான பொய் – ஐங்கரநேசன்
11 Mar,2020
இராணுவத்திடம் தமது சொந்தங்களை ஒப்படைத்தவர்கள் கண்ணீருடன் அலைந்து தேடிக்கொண்டிருக்கையில் அனைவரையும் விடுவித்துவிட்டோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறுவது அப்பட்டமான பொய் என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சாடியுள்ளார்.
மேலும் இதற்கு அவரின் முகவர்களாகத் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், “யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியக்கோரி அவர்களது சொந்தங்கள் பலவருடங்களாகத் தொடர்போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும்போது, அவர்களை ஏளனம் செய்வதுபோலப் பிரதமரின் கூற்று அமைந்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பேரினவாதத்தை மூலதனமாகக் கொண்டு மக்களின் வாக்குகள் இல்லாமலே வெற்றியைப் பெற்ற ராஜபக்ஷ சகோதரர்கள் தற்போது தமிழ்மக்களின் எந்த ஒரு கோரிக்கையையேனும் கண்டுகொள்ளாமல் இலங்கையை பௌத்த சிங்கள நாடாகக் கட்டியமைப்பதில் முனைப்புக் காட்டிவருகின்றனர்.
இன்னொருபுறம் அவர்களது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும், அவர்களோடு கூட்டுச் சேர்ந்திருக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்குக்கேட்டு வலம்வரத் தொடங்கியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலின் போது தெனிலங்கையின் அரசியல் கள நிலைமைகளை அறியாது எமது தமிழ்த் தலைமைகள் எடுத்த நிலைப்பாட்டால் தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியாகப் பேரம்பேசும் சக்தியும் இல்லாமற்போனது.
ஜனாதிபதித் தேர்தலில் தென்இலங்கையைச் சிங்கள மக்கள் தங்களை ஒரு தனியான தேசமாகச் சிந்தித்து முடிவெடுத்தது போன்று தமிழ்மக்களும் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியோ, பகீஸ்கரித்தோ தங்களைத் தனியான ஒரு தேசமாக நிரூபித்திருக்கமுடியும். எமது தலைவர்களால் தவறவிடப்பட்ட அந்தவாய்ப்பை எமது மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் சரிவரப் பயன்படுத்த வேண்டும்.
சரணடைந்தவர்கள் எல்லோரையும் விடுதலை செய்துவிட்டோம், காணாமற் போனவர்கள் என்று இங்கு எவரும் இல்லை என்று அரசாங்கம் அறிவித்த பின்பும், அதைப்பற்றி எதுவுமே பேசாமல் வாக்குக் கேட்டுவரும் தெனிலங்கைக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் பேரினவாதக் கட்சிகளுக்கு முண்டுகொடுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் வாக்குகள் எதனையும் வழங்காது வடக்குக் கிழக்கில் தமிழ்மக்கள் நாங்கள் தனியான ஒரு தேசம் என்பதை முரசறைவோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.