மூன்று நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று ஆய்வு
10 Mar,2020
மூன்று நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் பயணிகளை கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்று(மார்ச் 10) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
தென்கொரியா, இத்தாலி மற்றும் இரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகைத் தரும் பயணிகளே இவ்வாறு தொற்று நோய் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அகில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.
இதன்படி, குறித்த பயணிகள் மட்டக்களப்பு பகுதியிலுள்ள பெட்டிக்ளோ கெம்பஸிற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி, கந்தகாடு பகுதியிலுள்ள தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையத்திற்கும் வெளிநாடுகளிலிருந்து வருகைத் தரும் பயணிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இதற்கமைய, தென்கொரியாவின் இன்சியோன் விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 3.33க்கு வருகைத் தந்த விமானத்திலிருந்து பயணிகள் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இத்தாலியிலிருந்தும் விமானமொன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
குறித்த இரண்டு விமானங்களிலும் 181 பேர் வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு நாட்டிற்கு வருகைத் தந்தவர்களில் 179 இலங்கையர்களும், 2 தென்கொரிய பிரஜைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த 181 பேரையும் மட்டக்களப்பு பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சுகாதார பிரிவின் இந்த நடவடிக்கைக்கு ராணுவத்தினர் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.
தயார் நிலையில் ராணுவத்தினர்
கோவிட் - 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் சுகாதார பிரிவினருக்கு தாம் ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாக இலங்கை ராணுவம் தெரிவிக்கின்றது.
இதன்படி, மட்டக்களப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு தற்காலிக தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வருகைத் தரும் பயணிகள் இரண்டு வார காலம் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படுவதாகவும் ராணுவத்தினர் குறிப்பிடுகின்றனர்.
சுமார் 2000 முதல் 2500 பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறும் வகையில் இந்த தற்காலிக தொற்று நோய் ஆய்வு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக ராணுவம் கூறுகின்றது.
வெளிநாடுகளிலிருந்து வருகைத் தந்து தொற்று நோய் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவோரிடமிருந்து 7500 ரூபாய் அறவிடப்படுவதாக வெளியான செய்தியை ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மறுத்துள்ளார்.
14 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்காகவும், மூன்று நேர உணவிற்காகவும் பணம் அறவிடப்படுவதாக இன்று காலை செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், அவ்வாறான எந்தவித அறவீடுகளும் கிடையாது என ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இலங்கையில் கோவிட் - 19 தொற்று உள்ளதா?
இலங்கையில் கோவிட் - 19 தொற்று உள்ளதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 300 வரை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
எனினும், இவர்களில் ஒருவருக்கு மாத்திரமே கோவிட் - 19 தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சீனா நாட்டு பெண்ணொருவருக்கே இந்த வைரஸ் தாக்கியமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும், அவர் பூரண குணமடைந்து தனது நாட்டிற்கு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இன்றைய தினம் கோவிட் - 19 வைரஸ் தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படும் 16 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும், சீன பிரஜையை தவிர எந்தவொரு இலங்கை பிரஜைக்கும் உள்நாட்டில் இந்த வைரஸ் தொற்று ஏற்படவில்லை என இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சுதத் சமரவீர பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.