இலங்கை நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டது: ஏப்ரல் 25 தேர்தல்
03 Mar,2020
இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் திங்கள்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது
நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திங்கள்கிழமை மாலை கையெழுத்திட்டார்.
இதன்படி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் மார்ச் மாதம் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடைபெறவுள்ளதாக வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு மே மாதம் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்திற்கான கால அவகாசம் இருக்கின்ற நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் 70 (1) சரத்தின் பிரகாரம், நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு நான்கரை வருடங்களின் பின்னரே ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த முதலாம் தேதியுடன் 8ஆவது நாடாளுமன்றத்தின் நான்கரை வருடம் பூர்த்தியாகிய பின்னணியில், அடுத்த நாளே ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஐக்கிய தேசிய முன்னணி வசம் காணப்பட்டதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அங்கத்துவம் வகிக்கும் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார்.
இந்நிலையில், நிறைவேற்று அதிகாரத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் இடையில் புரிந்துணர்வு காணப்படாது நிலையில், நாடாளுமன்றத்தின் நான்கரை வருடங்கள் பூர்த்தியாகும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதற்கமைய நாடாளுமன்றம் திங்கள் நள்ளிரவு கலைக்கப்பட்டது.
66 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. 8ஆவது நாடாளுமன்றத்தை அங்கம் வகித்த 66 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த முறை ஓய்வூதியம் கிடையாது என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இட்டவல பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
ஐந்து வருடங்களை பூர்த்தி செய்யாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பின் பிரகாரம் ஓய்வூதியம் வழங்கப்படாது என அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய ஐந்து வருடங்கள் பூர்த்தியடைவதற்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமையினால், நாடாளுமன்றத்தை ஐந்து வருடம் பூர்த்தி செய்யாத 66 பேருக்கான ஓய்வூதியம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.