சுங்கப் பணிப்பாளராக இராணுவ அதிகாரி - தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!
02 Mar,2020
சுங்கப் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய இரண்டு ஆண்டுகளுக்கு மாத்திரமே, பதவியில் இருப்பார் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என்று சுங்க தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சுங்கப் பணிப்பாளர் நாயகமாக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ரவிபிரிய அண்மையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார். இந்த நியமனம், சுங்க மற்றும் நிர்வாக சேவை அதிகாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியிருந்தது.
இந்த நிலையில் கடந்தவாரம், சுங்கத் திணைக்கள தொழிற்சங்கங்களின் தலைவர்களை ஜனாதிபதி சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
இதன்போதே, இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே மேஜர் ஜெனரல் விஜித பணிப்பாளர் நாயகமாக பதவியில் இருப்பார் என்றும், அதன் பின்னர், சுங்கத் திணைக்கள அதிகாரி ஒருவரே அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும், ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர், தெரிவு செய்யப்படும் புதிய அரசாங்கம், சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகமாக சுங்க அதிகாரி ஒருவரையே நியமிக்க வேண்டும் என்று, சுங்க கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும், தம்மிடம் ஜனாதிபதி உறுதியளித்தார் என, சுங்க கண்காணிப்பாளர்கள் தொழிற்சங்க தலைவர் உதித்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை சுங்க பணிப்பாளராக நியமிப்பதை ஏற்க முடியாது என்றும் தாங்கள் ஜனாதிபதியிடம் கூறியதாகவும், எனினும், இந்த நியமனம் இரண்டு ஆண்டுகளுக்கான தற்காலிக ஏற்பாடே என்றும், இதனை ஏற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார் எனவும், அவர் குறிப்பிட்டார்.
எனினும், சுங்க தொழிற்சங்கங்கள், ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு இணக்கம் தெரிவித்துள்ள போதும், சிறிலங்கா நிர்வாக சேவை சங்கம், இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.