சவேந்திர சில்வா மீதான அமெரிக்கத் தடை
25 Feb,2020
சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் உள் நுழைவுத் தடை திடீரென்று எடுக்கப்பட்ட ஒரு முடிவு அல்ல.
சவேந்திர சில்வா தளபதியாக நியமிக்கப்பட்டது முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில். அவர் அவ்வாறு தளபதியாக பதவி உயர்த்தப்பட்டதை அப்பொழுதே அமெரிக்கா எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. அவர் தளபதியாக உள்ள வரையிலும் இலங்கைத் தீவின் தரைப் படையோடு அமெரிக்கத் தரைப் படை இணைந்த பயிற்சி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாது என்றும் அப்போதைய ஜனாதிபதிக்குக் கூறப்பட்டதாக ஒருதகவல் உண்டு.
எனினும் சேவை மூப்பின் அடிப்படையில் சவேந்திர சில்வாவைதான் நியமிக்க வேண்டுமென்றும் அவருடைய சேவைக் காலம் அடுத்த ஓர் ஆண்டுக்குள் முடிந்துவிடும் என்பதனால் அவர் ஓராண்டு காலமே தளபதியாக இருப்பார் என்றும் அப்போதைய ஜனாதிபதி மேற்கத்தேய நாடுகளின் பிரதானிகளிடம் தெரிவித்ததாக ஒரு தகவல் உண்டு. ஆனால் புதிய ஜனாதிபதி கோட்டாபய அவருக்கு சேவை நீடிப்பு வழங்கினார்.
சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்திருப்பதைப் போல உள் நுழைவுத் தடைகளை ஏற்கனவே வேறு மேற்கு நாடுகள் இலங்கை தீவின் வேறு படைப் பிரதானிகளுக்கு எதிராக விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பின்னணியில் நிற்கும் புத்திஜீவிகள் குழு என்று கூறப்படுகின்ற வியத்மகா அமைப்பின் இணையத் தளத்துக்கு போனால் அங்கே ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் சிறுசிறு காணொளிகளை காணலாம்.
அப்படியொரு காணொளியில் ஸ்ரீலங்காவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் பாலித கோகன, சில படைத் தளபதிகள் சில நாடுகளுக்குச் செல்லமுடியாது இருக்கிறது என்று பேசியிருக்கக் காணலாம். எனவே ஏற்கனவே சில நாடுகள் இதுபோன்ற முடிவுகளை எடுத்துவிட்டன. ஆனால் இப்பொழுதுதான் அமெரிக்கா அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது. அதுவும் ஒரு படைத் தளபதிக்கு எதிராக என்பதே தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறது.
சவேந்திர சில்வா அமெரிக்காவுக்குப் போவதற்காக விசாவுக்கு விண்ணப்பித்திருக்கவில்லை. ஆனால் அமெரிக்காவோ அவர் இனி வரமுடியாது என்று அறிவித்திருக்கிறது. இது ஒரு குறியீட்டு நடவடிக்கையா?
தனியே சவேந்திர சில்வாவுக்கு மட்டும் எதிரானது இல்லையா? போர்க் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கும் எல்லாருக்கும் எதிரானதா? ஆயின், அமெரிக்கா ஏன் இப்பொழுது அப்படி ஒரு முடிவை எடுத்தது? அதுவும் நாட்டின் பிரதமர் மஹிந்த இந்தியாவுச் சென்று திரும்பியிருக்கும் ஒரு பின்னணியில்?
இந்த இடத்தில் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். சவேந்திர சில்வாவுக்கு எதிரான முடிவை அமெரிக்கா இப்பொழுது எடுக்க காரணம் என்ன? சவேந்திர சில்வா அமெரிக்கா குறிப்பிடும் குற்றங்களை அண்மையில்தான் செய்தவரா?
இல்லை. இக்குற்றச்சாட்டுகள் கடந்த 10 ஆண்டுகளாக அவர் மீது முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்றால் அமெரிக்கா எப்பொழுதோ அதைச் செய்திருக்க வேண்டும். அதுவும் அவர் ஐ.நாவுக்கான இலங்கைத் தீவின் பிரதிநிதியாக இருந்தபோது ஏன் அதைச் செய்யவில்லை?
இப்பொழுதுமட்டும் செய்வது ஏன்? இதில் சவேந்திர சில்வா மட்டும்தான் குற்றவாளியா? அவருக்கு உத்தரவிட்ட அரசியல்வாதிகள் உண்டு. தளபதிகள் உண்டு. அவர்களுக்கு எதிராக ஏன் அமெரிக்கா இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?
குறிப்பாக சவேந்திர சில்வா அப்பொழுது தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு கீழ் வேலை செய்தவர். அப்படியென்றால் இதில் சரத் பொன்சேகாவுக்கு எதிராகவும் அமெரிக்கா தடை விதிக்குமா? அதுமட்டுமல்லாது சரத் பொன்சேகாவுக்கும் உத்தரவிட்ட அரசியல்வாதிகள் உண்டு. குறிப்பாக இப்பொழுது நாட்டில் ஜனாதிபதியாக இருப்பவரும் பிரதமராக இருப்பவரும் அவ்வாறு உத்தரவிட்ட இரண்டு அரசியல் தலைவர்களாவர்.
அதிலும் குறிப்பாக இப்போதிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய இறுதிக் கட்டப் போரில் பாதுகாப்புத் துறைச்செயலாளராக இருந்தவர். எனவே சவேந்திர சில்வா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அவருக்குக் கட்டளையிடும் அரசியல் தீர்மானங்கள் எடுத்த கோட்டாபயவுக்கும் பொருந்தும். அப்படியென்றால் அவருக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்குமா?
அவர் கடந்த ஆண்டுக்கு முன்புவரை அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்தார். தனது பிரஜையாக இருந்த கோட்டாபயவை ஏன் அமெரிக்கா விசாரிக்கவில்லை? அவர் தனது பிரஜாவுரிமையை இரத்துச் செய்ய முயன்றபோதும் ஏன் அமெரிக்கா விசாரிக்கவில்லை?
இப்போழுதும் அமெரிக்கப் பிரஜைகளாக இருக்கும் கோட்டாபயவின் குடும்பத்தவர்களுக்கு எதிராக ஏன் தடை விதிக்கப்படவில்லை? 2013இல் இருந்து அமெரிக்காவானது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகும் வரையிலுமான காலப்பகுதி முழுவதிலும் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை முன்னின்று நிறைவேற்றியது.
அத்தீர்மானங்களுக்கு ஆதரவாக ஏனைய நாடுகளின் ஆதரவைத் திரட்டியது. அவ்வாறு தீர்மானங்களை நிறைவேற்றிய அமெரிக்கா அப்பொழுது தனது பிரஜையாக இருந்த கோட்டாபயவை ஏன் விசாரிக்கவில்லை? அமெரிக்கா உண்மையாகவே போர்க் குற்றங்களை விசாரிக்க விரும்பியிருந்திருந்தால் ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்ற முன்பு தனது பிரஜையை விசாரித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
விசாரிக்கக் கிடைத்த சந்தர்ப்பங்களில் அவரை விசாரிக்காமல் விட்டுவிட்டு இப்பொழுது அவர் ஜனாதிபதியாக வந்தபின்னர் அவருடைய கட்டளைக்குக் கீழ்படிந்து செயற்பட்ட ஒரு தளபதியை நாட்டுக்குள் வரவேண்டாமென அமெரிக்கா தடை விதித்திருக்கிறது. அப்படி என்றால் அமெரிக்காவின் உள்நோக்கம் என்ன?
நிலைமாறு கால நீதிக்கான ஐ.நா.வின் தீர்மானத்தை ராஜபக்ஷக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இம்முறை முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்துக்கு எதிராக நிலை எடுக்கப்போவதாக ராஜபக்ஷக்கள் கூறிவருகிறார்கள். அப்படி அவர்கள் ஐ.நா.வுக்கு எதிராகத் திரும்பினால் இலங்கை தீவின் மீதான ஐ.நா.வின் பிடி பலவீனமடையும்.
எனவே நிலைமாறு கால நீதிக்குரிய ஐ.நா.வின் தீர்மானத்தை ஏற்குமாறு இலங்கை தீவை நிர்ப்பந்திப்பது மேற்படி தடையின் நோக்கமாக இருக்குமா? அல்லது எய்தவன் இருக்க அம்பைத் தடைசெய்து அதன் மூலம் எய்தவன் மீது நிர்ப்பந்தத்தைப் பிரயோகித்து தனக்கு வேண்டிய வேறு சில இலக்குகளை அடைவதற்கு அமெரிக்கா எத்தணிக்ககின்றதா? அவ்வாறு வேறு இலக்குகள் எதுவும் அமெரிக்காவுக்கு உண்டா?
அமெரிக்காவினமிலேனியம் சவால் உடன்படிக்கை, சோபா உடன்படிக்கை உட்பட மொத்தம் மூன்று உடன்படிக்கைகளை ராஜபக்ஷக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அந்த உடன்படிக்கைகள் இலங்கைத் தீவு, சீன மயப்படுவதை வரையறைக்கு உட்படுத்தும் நோக்கத்தைக் கொண்டவை.
அந்த உடன்படிக்கைகளை முன்னைய அரசாங்கம் அதன் ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியில் அதிகம் பரபரப்பின்றிக் கைச்சாத்திட முற்பட்டது. ஆனால் அதை மைத்திரிபால சிறிசேன உட்பட ராஜபக்ஷ சகோதரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். கோட்டாபய தனது தேர்தல் பிரசாரத்தில் அந்த உடன்படிக்கைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று வாக்குறுதி அளித்தார்.
இப்பொழுது அவர் ஜனாதிபதி ஆகிவிட்டார். மகிந்த ராஜபக்ச பிரதமர் ஆகிவிட்டார். அவர்களுடைய ஆட்சி இனிவரும் ஐந்தாண்டுகளுக்கு நீடித்திருக்கலாம். அதற்கு மேலும் ஒரு வம்ச ஆட்சியை ஏற்படுத்தத் தேவையான தேர்தல் முதலீடு, அதாவது யுத்த வெற்றி அந்தக் குடும்பத்திடம் உண்டு.
எனவே இனி வரப்போகும் ஐந்து ஆண்டுகளுக்கும் ஆட்சியில் இருக்கப்போகும் ராஜபக்ஷ சகோதரர்களின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து மேற்படி உடன்படிக்கைகளை ஏற்குமாறு நிர்ப்பந்திப்பது மேற்படி தடையின் நோக்கமாக இருக்குமா?
அமெரிக்காவின் நோக்கம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் மேற்படி தடையானது உடனடியாக ராஜபக்ஷ சகோதரர்களுக்கு சேவகம் செய்யப் போகிறது. எப்படியெனில் அடுத்த பொதுத் தேர்தலின் போது மேற்கு நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராக குறிப்பாக? ஐ.நா.வுக்கு எதிராக சிங்கள வெகுசன உணர்வுகளைத் தூண்டி ஒரு சிங்கள-பௌத்த இனமான அலையை மேலும் வளர்த்தெடுக்க இத்தடை அவர்களுக்கு உதவும்.
அவர்கள் பெற்ற வெற்றி எல்லாம் யுத்த வெற்றி வாதத்தின் விளைவுகளே. யுத்த வெற்றி வாதத்தை 2020 ஆம் ஆண்டுக்கும் புதுப்பிப்பதற்கு மேற்படி தடை அவர்களுக்கு உதவும். ஐ.நா. கூட்டத் தொடர் நடக்கவிருக்கும் ஒரு பின்னணியில் மேற்படி தடைக்கு உணர்ச்சிக் கொந்தளிப்பான ஓர் எதிர்வினை இருக்கும்.
வெள்ளைக்காரர்களும் புலம் பெயர்ந்து இயங்கும் புலிகள் இயக்கமும் தமது நாட்டின் இறைமைக்கு எதிராகச் சதி செய்வதாகக் காட்டி சிங்கள மக்களின் கூட்டு உளவியலை தமக்கு சாதகமாகத் திரட்ட அவர்களால் முடியும். இதன்மூலம் அவர்கள் எதிர்பார்க்கும் பெரும்பான்மை பலத்தை அடுத்த பொதுத் தேர்தலில் பெறமுடியுமா என்று அவர்கள் சிந்திக்கலாம்.
அப்படிப்பார்த்தால் மேற்படி தடையானது ஒருபுறம் வெளியுலகில் இலங்கைத் தீவுக்கு அவமானத்தையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ராஜதந்திர வட்டாரங்களில் நாட்டின் அந்தஸ்தை அங்கீகாரத்தைக் குறைத்திருக்கிறது.
ஆனால் உள்நாட்டிலோ, அது ஓர் இன அலையை உற்பத்தி செய்வதற்கு உதவப்போகிறதா? அதாவது இதுபோன்ற தடைகள் மூலம் ராஜபக்ஷ சகோதரர்கள் வெளியரங்கில் பலவீனமடையக் கூடும்.