போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகல்: 26-ந் தேதி அறிவிக்கிறது
24 Feb,2020
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிகட்ட சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த போர்க்குற்றம் குறித்து வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 நாடுகள் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தில் இலங்கையும் ஒரு அங்கம் ஆகும்.
இதற்கிடையே, இலங்கை ராணுவ தளபதி சாவேந்திர சில்வா, அமெரிக்கா வருவதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த இலங்கை, போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளது.
இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்தனே, வருகிற 26-ந்தேதி ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அப்போது இந்த முடிவை அவர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று அவரது அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையர் எழுப்பும் கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பார்.
முன்னதாக, இலங்கை வெளியுறவு செயலாளர் ரவிநாத ஆர்யசின்கா, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவரை நேரில் சந்தித்து இந்த முடிவை தெரிவித்தார்.