இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, அவரது நெருங்கிய குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ள விவகாரம், இலங்கை அரசியற் பரப்பில், கடுமையான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்புக் குறித்து, இரண்டு விதமான நோக்கு நிலைகள் அரசியல் பரப்பில் காணப்படுகின்றன.
தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவருமே, அமெரிக்காவின் இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறார்கள்.
அதேவேளை, மற்றொரு புறத்தில், சிங்கள அரசியல் தலைவர்கள் மாத்திரமன்றி, மனோ கணேசன், திகாம்பரம் போன்ற தென்னிலங்கையைத் தளமாகக் கொண்ட அரசியல் தலைவர்கள், இந்த முடிவை எதிர்த்திருக்கிறார்கள் அல்லது, கேள்விக்குட்படுத்தி வருகிறார்கள்.
அடுத்த வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது தான், கொழும்பு அரசியலில் கூடுதல் பரபரப்பு ஏற்படக் காரணமாகும்.
ஏற்கெனவே, கடந்த நவம்பர் மாதம், நடந்த ஜனாதிபதித் தேர்தலில், அமெரிக்க எதிர்ப்புணர்வு, சிங்கள பௌத்த தேசியவாத உணர்வு, தேசியப் பாதுகாப்பு ஆகிய விடயங்களை முன்னிலைப்படுத்தி, அதில் வெற்றியையும் பெற்றிருந்தது தற்போதைய அரசாங்கம்.
மஹிந்த – கோட்டா அரசாங்கத்தின், பிரதான அரசியல் உத்தியாக இந்த விவகாரங்களே இருந்து வருகின்றன.
எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் கூட, இவ்வாறான உத்தியைப் பயன்படுத்தவே, அரசாங்கம் விரும்புகிறது.
ஜெனீவாத் தீர்மானம் தொடர்பான, இறுக்கமான நிலைப்பாடு, அமெரிக்காவுடனான எம்சிசி, அக்சா, சோபா உடன்பாடுகள் விடயத்தில் கடும் போக்கு போன்ற விடயங்களின் ஊடாக, மேற்குலக எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருப்பதாக, அரசாங்கம் காட்டிக் கொள்கிறது.
இவ்வாறான நிலைப்பாட்டின் மூலம், நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் உறுதி செய்யும் அரசாங்கமாக இருப்பதாக, சிங்கள – பௌத்த மக்கள் மத்தியில் தம்மை வெளிப்படுத்தி வருகிறது.
இவ்வாறானதொரு சூழலில், இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா மீது, அமெரிக்கா விதித்துள்ள தடை, ஒரு பக்கத்தில் அரசாங்கத்துக்கு சர்வதேச அரங்கில் நெருக்குதல்களை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் அரசியல் ரீதியாக, நன்மை தரக் கூடியது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அரசாங்கம், அரசியல் ரீதியாகத் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கு, அமெரிக்காவின் இந்த அறிவிப்பு, கைகொடுத்துள்ளது என்றே கூறலாம்.
அமெரிக்காவின் அறிவிப்பு வெளியானதும், அரசாங்கமும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் தலைவர்களும், இந்தத் தடைக்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
அமெரிக்காவின் முடிவு அநீதியானது என்றும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அவர்கள் கோரிவருகிறார்கள்.
அதனுடன் நிற்கவில்லை, அதற்கும் அப்பாற்சென்று, அமெரிக்காவின் மீது குற்றம் சாட்டுகிறார்கள்; போர்க்குற்றங்கள் குறித்துப் பேச, அமெரிக்காவுக்கு என்ன அருகதை இருக்கிறது என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
உலகில் பல நாடுகளில், அமெரிக்கா போர்க் குற்றங்களை இழைத்திருக்கும் நிலையில், இலங்கை இராணுவத் தளபதிக்கு எதிராக, அமெரிக்கா எவ்வாறு தடை விதிக்கலாம் என்று, அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
சவேந்திர சில்வாவின் நியமனம், இந்த நாட்டின் இறைமைக்கு உட்பட்ட விவகாரம் என்று, அரசாங்கம் நியாயப்படுத்துவதைப் போலவே, அமெரிக்காவுக்கும் அதே உரிமை உள்ளது.
அமெரிக்காவில் உள்ள சட்டங்களின் படியே, அந்த நாடு நடந்து கொண்டிருக்கிறது. அதைவிட, சவேந்திர சில்வாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை, அமெரிக்காவுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றே தவிர, அதற்கு வெளியே செல்லுபடியாகக் கூடியதல்ல.
தனது நாட்டுக்குள் யாரை நுழைய அனுமதிக்கலாம், யாரை அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுக்கும் அதிகாரம் – உரிமை அமெரிக்காவுக்கு மாத்திரமே உள்ளது. அதனை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது.
வெளிநாடுகளில் அமெரிக்கா போர்க்குற்றங்களை இழைத்தது என்றால், அதற்கு எதிராக, இலங்கை எங்காவது உலக அரங்கில் முறைப்பாடு செய்திருக்கிறதா, நடவடிக்கை எடுத்திருக்கிறதா, அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு, இலங்கைக்குள் நுழையத் தடை விதித்திருக்கிறதா? – இல்லை.
அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகளையும் இலங்கை கொண்டிருக்கவில்லை. ஆனால், அமெரிக்கா அவ்வாறான சட்டங்களைக் கொண்டிருக்கிறது.
அந்தச் சட்டங்களுக்கு அமையவே செயற்படுகிறது. சவேந்திர சில்வாவின் மீதான தடைக்குப் பதிலடியாக, அமெரிக்காவைச் சேர்ந்த, போர்க்குற்றவாளிகளுக்குத் தற்போதைய அரசாங்கம் தடைவிதித்திருக்கலாம்.
ஆனால், அரசாங்கம் அவ்வாறான ஒரு நடவடிக்கையை எடுக்காது; எடுக்கவும் முடியாது. ஏனென்றால், அது அமெரிக்காவுடனான முறுகலை இன்னும் தீவிரப்படுத்தும்.
அதைவிட, அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு, ஏதாவது ஒரு சர்வதேச ஆவணம் தேவைப்படும்.
ஐ.நா விசாரணை அறிக்கையையும் பிற அமைப்புகளின் விசாரணை அறிக்கைகளையும் அடிப்படையாக வைத்தே, சவேந்திர சில்வா மீது, அமெரிக்கா நடவடிக்கை எடுத்திருக்கிறது. அவ்வாறானதோர் ஆவணம் இலங்கைக்கும் தேவைப்படும்.
அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கையின் மீது, எதிர்வினையாற்றுவதை வெறும் அரசியலாகத் தான், தென்னிலங்கை அரசியல்வாதிகள் மேற்கொள்கிறார்கள்.
ஏனென்றால், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ஒரு பகுதியினருக்குச் சாதகமானது; இன்னொரு பகுதியினருக்குப் பாதகமானது.
ஆளும்கட்சி, இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. முன்னைய அரசாங்கமே, குறிப்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் தான் இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்று குற்றம்சாட்டுகிறது.
தமது அரசாங்கம், அமெரிக்காவுடனான உடன்பாடுகள் விடயத்தில் கடும் போக்கை வெளிப்படுத்தியதால் தான், அமெரிக்கா இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகச் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில், பிரசாரம் செய்து வருகிறது.
ஜனாதிபதித் தேர்தலின் போது, சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை எவ்வாறு கவர முடிந்ததோ, அதுபோல, இந்தத் தடையைப் பயன்படுத்தி, பொதுத்தேர்தலிலும் வெற்றியைப் பெற்று விடுவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறது, இந்த அரசாங்கம்.
ஆளும்கட்சியின் பிரசாரங்கள், அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துகள் அதைத் தான் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
மறுபக்கத்தில், அமெரிக்காவின் இந்தத் தடை, ஐக்கிய தேசியக் கட்சியையும் அதனைச் சார்ந்த கூட்டணிக் கட்சிகளையும் அதிர்ச்சி கொள்ள வைத்திருக்கிறது.
பொதுத்தேர்தல் நடக்கவுள்ள சமயத்தில், அமெரிக்கா இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதை, ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் விரும்பவில்லை.
மனோ கணேசன், பழனி திகாம்பரம் போன்றவர்கள் அமெரிக்காவுக்கு எதிராகவும், சவேந்திர சில்வாவுக்கு ஆதரவாகவும் வெளிப்படுத்தி இருக்கின்ற கருத்துகள், இதனை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றன.
அமெரிக்காவின் இந்தத் தடை, ஆளும்கட்சிக்குச் சாதகமாகவும் தமக்குப் பாதகமாகவும் அமையும் என்பதாலேயே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
கொழும்புத் தமிழ்க் வாக்குகளை நம்பியிருக்கும் மனோ கணேசன் போன்றவர்கள் கூட, அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராகக் கருத்துகளை வெளிப்படுத்தித் தமது ‘தேசப்பற்றை’ வெளிப்படுத்த முற்பட்டிருக்கிறார்கள்.
இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, அமெரிக்கா செல்வதை இலங்கையர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று, ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் கூறியிருக்கிறார்.
ஆனாலும், தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைவர்களும், அமெரிக்காவின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து வரவேற்றிருக்கிறார்கள். இந்த விவகாரத்திலும் கூட, நாடு இரண்டுபட்ட நிலையில் தான் இருக்கிறது.
பாதிக்கப்பட்ட தமிழர்கள், தமக்கான நீதியை எதிர்பார்க்கின்றார்கள். அதுபோலவே, ஒட்டு மொத்தத் தமிழர்களும் தமக்கான நீதியான, நியாயமான அரசியல் உரிமைகளையும் தமது அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வையும் எதிர்பார்க்கிறார்கள்.
அந்த நீதி கிடைக்காத வரையில், தமக்கான தீர்வு கிட்டாத வரையில் அவர்களால் ஒரே தேசமாக ஒன்றித்து செயற்படவோ, சிந்திக்கவோ முடியாமல் இருக்கிறது.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் இருந்து, தேசப்பற்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் அறிவுரை கூறியிருக்கிறது. ஆனால், தேசப்பற்று என்பது கற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல; அது தானாக உருவாக வேண்டும்.
தமிழர்கள் மத்தியில், அந்த உணர்வு உருவாக விடாமல் தடுத்துக் கொண்டே, தென்னிலங்கை அரசியல் சக்திகள், தமிழர்களை ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துக் கொண்டிருப்பது, முரண்பாடானது.
- கே. சஞ்சயன்