ஐநாவின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு
19 Feb,2020
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் இதற்கான முடிவை எட்டியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இலங்கை ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்கா செல்ல பயணத்தடை விதிக்கப்பட்ட சம்பவத்தை கருத்தில் கொண்டே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஷவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்து அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க பயணத்தடை விதித்திருந்தது.
இந்த நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு அப்போதைய இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியமை மிகப் பெரிய காட்டிக் கொடுப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை படையினர் மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் 2015ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவை வழங்கியதாக அவர் நினைவூட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு அப்பாற் சென்று 2011ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே 2015ஆம் ஆண்டு பிரேரணை தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் இலங்கை பாதுகாப்பு தரப்பனருக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன உள்ளடங்கிய நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயங்களை கருத்திற் கொண்டே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
30/1 தீர்மானம் என்பது என்ன?
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்திருந்தனர்.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் 2015ஆம் ஆண்டு ஆக்டோபர் மாதம் மிக முக்கிய தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஆதரவுடன், அமெரிக்கா 30/1 தீர்மானத்தை நிறைவேற்றிருந்தது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் கலப்பு நீதிமன்றமொன்றை அமைத்து விசாரணைகளை நடத்த வேண்டும் என அந்த தீர்மானத்தில் முக்கியமாக கூறப்பட்டிருந்தது.
அத்துடன், காணாமல் போனோரை கண்டறிவதற்கான அலுவலகத்தை ஸ்தாபித்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட சரத்துக்களும் அந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
மேலும், இராணுவம் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என ஐநா இதன்போது வலியுறுத்தியிருந்தது.
இந்த தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் 2015ஆம் ஆண்டு இணை அனுசரணை வழங்கியிருந்தது.
யுத்தத்தை நிறைவு செய்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை சந்தித்திருந்தது.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டி ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தார்.
இந்த நிலையில், புதிதாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் அந்த காலப் பகுதியில் ஐநா மனித உரிமை பேரவையில் கலந்துக்கொண்டு, அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது.
ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கப்பட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் சார்ந்தவர்கள் அந்த தீர்மானத்திற்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர்.
இலங்கை இராணுவத்தை சர்வதேச சமூகத்திற்கு காட்டிக் கொடுக்கும் செயற்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டு வருவதாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் கூறியிருந்தனர்.
30/1 தீர்மானமானது, மிகப் பெரியதொரு காட்டிக் கொடுப்பு என்ற விதத்தில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்த நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கிய கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவாகினார்.
அதனைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியிலேயே யுத்தத்தை நிறைவு செய்ய ஒத்துழைப்பு வழங்கிய தற்போதைய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கும், அவரது குடும்பத்திற்கும் அமெரிக்காவிற்குள் பயணிக்க அந்தநாட்டு அரசாங்கம் தடை விதித்தது.
ஷவேந்திர சில்வா இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் உறுதியாக சாட்சியங்கள் இருப்பதாக தெரிவித்தே அமெரிக்கா இந்த பயணத் தடையை விதித்தது.
இந்த தடையுத்தரவை மேற்கோள்காட்டி, இலங்கை இணை அனுசரணை வழங்கிய 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது