முல்லைத்தீவு: அகழாய்வு பணிகள் தொடக்கம் - மனித எச்சங்களுடன் துப்பாக்கி ரவைகள் மீட்பு
15 Feb,2020
முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) அகழாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.லெனின்குமாரின் உத்தரவிற்கு அமைய, சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் இந்த அகழாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, சிதைவடைந்த மனித எச்சங்கள் சில கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், துப்பாக்கி ரவைகள் சிலவும், ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.மீட்கப்பட்ட மனித எச்சங்கள் இரண்டு பேரினுடையதாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மனித எச்சங்கள் பரிசோதனைகளுக்காக சட்ட வைத்திய பரிசோதனை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, போலீஸார், தடயவியல் போலீசார் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் அதிகாரிகள் என பலரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் வைத்தியசாலையொன்றுக்கான கட்டடமொன்று நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த பகுதியில் கண்ணிவெடி காணப்படுவதாக வெளியான தகவலை அடுத்து, கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு நடவடிக்கைகளில் புதன்கிழமையன்று மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் போலீசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், நீதவான் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
முல்லைத்தீவு நீதவானின் உத்தரவிற்கு அமைய குறித்த இடத்தில் அகழாய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே மனித எச்சங்களுடன் துப்பாக்கி ரவைகள் சிலவும் கைப்பற்றப்பட்டன.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் முல்லைத்தீவு பகுதியில் நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.