தமிழ் மக்களுக்கான தீர்வு எங்களிடமே,இந்தியாவிடம் அல்ல;பிரதமர் தெரிவிப்பு
15 Jan,2020
ஜெனீவா விவகாரத்தினை நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,தமிழ் மக்களுக்கான தீர்வினை இந்தியாவினால் வழங்க முடியாது என்றும் அந்த தீர்வினை இலங்கை அரசாங்கத்தினால் மாத்திரமே வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று காலை அலரிமாளிகையில் இடம்பெற்ற தமிழ் ஊடகப் பிரதானிகள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரம் குறித்து நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும் இம்மாதம் மார்ச்சில் இடம்பெறவுள்ள அமர்வில் இலங்கைக்கு எவ்வித சவால்களும் இல்லை.
இலங்கையில் பொதுத்தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளமை காரணமாக இலங்கை விவகாரம் குறித்து ஜெனீவாவில் பேசப்படாது என எதிர்பார்கின்றோம்.
மேலும் தமிழ் மக்களுக்கு தேவையான அரசியல் தீர்வினை இந்தியாவே பெற்றுக் கொடுக்க வேண்டும் என சில தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்று தெரிவித்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச,
தமிழ் மக்களுக்கான தீர்வினை இந்தியாவினால் வழங்க முடியாது. மாறாக தமிழ் மக்களுக்கான தீர்வினை இலங்கை அரசாங்கத்தினால் மாத்திரமே வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
சில தமிழ் ஊடகங்கள் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களையே தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. இதுவே தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்க காரணமாகின்றது.
எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதனை தமிழ் ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்.
அத்துடன், வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் தமிழ் மக்களுக்கு தேவையானவற்றினை அரசாங்கம் தொடர்ந்தும் செய்யும் என்றும் தெரிவித்த மகிந்த ராஜபக்ச,
13 பிளஸ் குறித்த எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதை நான் கூறிக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்