தற்போதைய அரசாங்கம் சொல்வதொன்று செய்வதொன்றாக உள்ளது – அநுர!
10 Jan,2020
தற்போதைய அரசாங்கம் சொல்வதொன்று செய்வதொன்றாக உள்ளது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தேர்தல் காலத்தில் தங்களின் வெற்றியை உறுதி செய்து கொள்வதற்காக பொதுஜன பெரமுன மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையே வழங்கியது.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் 2017இல் செய்யப்பட்ட ஒப்பந்தம் சோபா ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது இலங்கை சட்டங்களுக்கு அவர்கள் கீழ்ப்படிய தேவையில்லை என்ற ஏற்பாடு இதில் காணப்படுகிறது.
அதாவது இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க அதிகாரிகள் இலங்கையின் எந்த சட்டத்தின் மூலமும் தண்டனைக்கு உட்படுத்த முடியாது.
இலங்கையின் மோட்டார் வாகன சட்டத்திட்டத்திற்கும் அவர்கள் கீழ்ப்படிய தேவையில்லை. வீதி விபத்தொன்று ஏற்படும் பட்சத்தில் அதற்கான தண்டனைகள் அவர்களுக்கு வழங்கப்படாது.
இவ்வாறான ஒப்பந்தமே சோபா ஒப்பந்தம், ஒரு நாட்டிற்குள் பிரவேசிக்கும் போது அந்த நாட்டிற்கான சட்டங்களுக்கு இணங்க வேண்டியது அனைவரினதும் கடமை.
அதனை இல்லாதொழிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மேற்கொள்ளப்படவிருந்தது. எம்.சி.சி ஒப்பந்தம் மூலம் நாட்டிற்கு நன்மைகள் கிடைக்குமென்று குறிப்பிட்டே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டாலும், 480 மில்லியன் அமெரிக்க டொலர் கடனற்ற நிதி வழங்கப்படுவது பற்றி சிந்திக்க வேண்டும்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் அது தொடர்பாக கவனம் செலுத்துகின்ற போதிலும் அதனை சரியென எழுபது சதவீனமோர் குறிப்பிடும் அதேவேளை நாட்டிற்கு தீங்கானது என முப்பது வீதமானவர்கள் தெரிவிக்கின்றனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.