2020இல் வட மாகணத்திலிருந்து 2,000 பொலிஸார் ஆட்சேர்ப்பு
10 Jan,2020
வட மாகாணத்திலிருந்து 2,000 பேர் பொலிஸ் உத்தியோகத்தர்களாக இணைக்கப்படவுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய அரச சேவையை மீள்கட்டமைத்தல் திட்டத்தின் கீழ், குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் “நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்திற்கு அமைய, வட மாகாணத்தை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களோடு இணைந்ததாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய இவ்வருடத்தில், வட மாகாணத்திலிருந்து 200 உப பொலிஸ் பரிசோதகர்கள், 1,400 பொலிஸ் கான்ஸ்டபிள்கள், 400 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட 2,000 பேர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இணைக்கப்படவுள்ளனர்.
குறித்த ஆட்சேர்ப்பின் மூலம், சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கையை மேலும் உயர் தரத்திற்கு கொண்டு செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றவர்கள், வட மாகாணத்தில் காணப்படுகின்ற பயிற்சி நிலையங்களில் பயிற்றப்பட்டு, பயிற்சியின் பின்னர் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.