சட்ட உருவாக்கத்திற்கு இலங்கைக்கு உதவ தயார் – பிரித்தானியா அறிவிப்பு
27 Dec,2019
சிறைச்சாலைகள் மறுசீமைப்பு மற்றும் சட்டங்களை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களில் இலங்கைக்கு உதவ தயாராக உள்ளதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது.
நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வாவுடனான சந்திப்பின்போதே பிரித்தானியாவின் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் இந்த அறிவிப்பினை விடுத்தார்.
குறித்த சந்திப்பின்போது, புதிய அரசினால் சட்டத் துறையில் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மட்டுமல்லாது சிறைச்சாலை பிரிவில் மேற்கொள்ளவுள்ள மறுசீரமைப்புகள் குறித்தும் அமைச்சரினால் உயர் ஸ்தானிகருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
குறித்த விடயங்கள் தொடர்பில் விசேட தெளிவூட்டல்களை வழங்குவதற்கும் பிரித்தானிய அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரிவித்த உயர் ஸ்தானிகர், தற்போது இடம்பெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து தமது பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசின் கீழ் நாட்டின் அனைத்து சமூகங்களுக்கும் நீதியை சமமான வகையில் வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையும் திட்டமும் எனவும் அமைச்சர் இதன்போது கூறினார்.
அதன்படி வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் ஒரே விதமான சேவையை வழங்க இவ்வரசு செயற்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்பின்னர் கருத்து தெரிவித்த உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன், சிறைச்சாலை தொடர்பான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கும் சட்டங்களை உருவாக்குவதற்கும் இலங்கைக்கு உதவத் தயார் என அறிவித்தார்.