யாழில் ஆறு வாள் வெட்டுக்குழுக்கள்: விரைவில் ஒழிப்போம்!
24 Dec,2019
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் செயற்படுகின்றன. அவற்றை அடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்.
அவர்கள் அனைவரையும் விரைவாக எம்மால் ஒழிக்க முடியும். அதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்ச்கர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (24) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இளைஞர்களே வாள்வெட்டில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு ஈடுபடும் 6 வாள்வெட்டுக் குழுக்கள் எம்மால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்த குழுக்களில் உள்ளவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.யாழில் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதனுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரைக் கைது செய்ய தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறிப்பாக வாள்வெட்டில் ஈடுபடுபவர்கள் இரண்டு விதமான வகையில் செயற்படுகின்றனர்.ஒரு குழு பழிவாங்கும் நோக்குடன் இன்னொரு குழுவுடன் மோதலில் ஈடுபடுகிறது.
மற்றையது போதைப் பொருள் வியாபாரிகளின் கீழ் செயற்படுகிறது. இந்தகக் குழுக்களை நாம் விரையில் ஒழித்துவிடுவோம்.அதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.