உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : தெரிவுக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தாமதம் காட்டுவது ஏன்? - விஜேபால
24 Dec,2019
உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரணைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுத்து தெரிவுக்குழுவினால் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் ஏன் தாமதம் காட்டுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி கேள்வி எழுப்பினார்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தற்போது ஆளுந்தரப்பிற்கு ஆதரவளிப்பதாகக் கூறுகின்றார். உண்மையில் கடந்த காலத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயற்பாடுகளே எமது தரப்பிற்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தின.
தற்போது எவரும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) பற்றி கருத்து வெளியிடுவதாக இல்லை. தாக்குதல்கள் இடம்பெற்ற போது பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியே பதவி வகித்தார்.
உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றத் தெரிவுக்குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியறிக்கையும் கையளிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் மீண்டும் புதிதாக ஆரம்பத்திலிருந்து விசாரணைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்ட தெரிவுக்குழுவினால் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியும். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் ஏன் தாமதம் காட்டுகின்றது?
அதேபோன்று பாராளுமன்றம் கூடுவதையும் ஒத்திவைத்திருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்குப் பெரும்பான்மை இல்லை என்பதை அறிந்திருக்கிறார்கள்.
நாங்கள் எப்போதும் விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதனால் எம்மை முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று நினைத்துக்கொள்ளக்கூடாது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மைப்பலத்தைப் பெற்று, ஒன்றிணைந்து முன்நோக்கிச் செல்வதற்கான போராட்டத்தை ஆரம்பிப்போம்.