‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’: சம்பிக்கவின் கைது ஏன்? – மஹிந்த விளக்கம்
22 Dec,2019
அரசியல் குற்றச்சாட்டிற்கும், சிவில் குற்றச்சாட்டிற்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இன்று சட்டம் முறையாக செயற்படுகின்றது எனவும் சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், பாட்டலி, ராஜித, ரணிலுடன் தானும் அதற்கு விதிவிலக்கல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாத்துவ பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட விவகாரம் தற்போதைய அரசியல் களத்தின் பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது. அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் ஆரம்பித்து விட்டதாக எதிர்த் தரப்பினர் கூறுகிறார்கள்.
எந்த நிலையிலும் தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியான பகைமையை தீர்த்துக்கொள்ள சட்டத்தினை கருவியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் கைது செய்தமைக்கான காரணம் குறித்து கவனம் செலுத்துவது கிடையாது.
கடந்த அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல் சட்டத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டன என்பதற்கு பல விடயங்களை சான்றாகக் குறிப்பிடலாம்.
அரசியல் குற்றச்சாட்டுக்கும், சிவில் குற்றச்சாட்டுக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. ஆகவே இடம்பெற்றுள்ள கைது விவகாரத்திற்கும் எமக்கும் தொடர்புண்டு என்பதை எதிர்த் தரப்பினர் குறிப்பிட்டுக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்று சட்டம் அனைவருக்கும் பொதுவாகவே செயற்படுகின்றது. சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம். நாடாளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி, ராஜித, மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஏன் நான் கூட விதிவிலக்கல்ல.
சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட வேண்டுமாயின் நிலைமையினை அனைவரும் எதிர்க்கொள்ள வேண்டும். இதற்கு அரசியல் விடயங்களை காரணம் காட்ட முடியாது. இடைக்கால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முன்னால் பாரிய விடயங்கள் சவாலாக காணப்படுகின்றன.
கடந்த அரசாங்கத்தின் இரு பிரதான அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் பல கேள்வி நிலையினை இன்று தோற்றுவித்துள்ளன. அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்குப் போதுமான நிதி திறைச்சேரியில் கூடக் கிடையாது. ஐந்து வருட ஆட்சியில் மக்களுக்கு அபிவிருத்தியும் முன்னெடுக்கவில்லை, பொருளாதாரமும் முன்னேற்றப்படவில்லை.
கடந்த அரசாங்கம் மக்களை மகிழ்விக்கும் செய்திகளை அதிகமாகவே வழங்கியது. ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. யதார்த்தத்தை உணராமல் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்குவதால் எவ்வித பயனும் ஏற்படாது. போலியான வாக்குறுதிகளை ஒருபோதும் அரசியல் தேவைகளுக்காக வழங்கமாட்டோம்” என்று தெரிவித்தார்.