நாட்டை ஆள்வதற்கு தகுதியுடையவர் என்பதால் கோத்தாபயவிற்கு ஆதரவளிக்கிறேன் – ஆளுநர் பதவி வதந்தி– முரளீதரன் பேட்டி
06 Dec,2019
எங்கள் நாட்டை ஆட்சி புரிவதற்கு தகுதியானவர் என்பதால் நான் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கின்றேன் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.
இந்துஸ்தான் டைம்சின் பத்மா ராவோ சுந்தர்ஜிக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
கேள்வி
இலங்கையின் வடமாகாணத்தின் ஆளுநராக பதவியேற்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உங்களை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் நீங்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன இதனை உறுதி செய்ய முடியுமா?
பதில்
இல்லை இது முகநூலில் வெளியான வதந்தி.எனக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை, அதேவேளை எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்பதையும் நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன்.
நான் ஒரு விளையாட்டுவீரன்,கிரிக்கெட் வீரன், நான் அரசியல்வாதியில்லை.
நான் நடாத்தும் மன்றம் வருடாந்தம் 60000 இலங்கையர்களிற்கு உதவுகின்றது.எனது அமைப்பின் மூலம் நாடு ஏதாவது உதவிகளை பெற விரும்பினால் நான் உதவுவேன், இது குறித்து எந்த கேள்வியும் இல்லை,என்னால் முடிந்த வகையில் வாழ்க்கையை முன்னேற்றத்தை ஏற்படுத்த முயல்வேன், உதவுவேன்.
கேள்வி-
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது நீங்கள் ஜனாதிபதி ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்தமை வடக்குகிழக்கு பகுதிகளில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது?நீங்கள் அவர்களிற்கு என்ன சொல்லவிரும்புகின்றீர்கள்?
பதில்-
இலங்கை ஒரு சிறிய நாடு,நாங்கள் பலமத சமூகத்தை கொண்டவர்கள்,அனைவருக்கும் கௌரவமுள்ளது.
நான் கொழும்பில் வாழ்கின்றேன், நான் தமிழன்,ஆனால் நாங்கள் இந்த நாட்டின் ஏனைய பிரஜைகளிற்கு உரிய அதேஉரிமைகளுடன் வாழ்கின்றோம்.
நான் இலங்கை;காக கிரிக்கெட் விளையாடும்போது சிங்கள பெரும்பான்மையினத்தவர்கள் உட்பட ஒவ்வொரு இலங்கை பிரஜையும் எனக்கு ஆதரவு வழங்குவார்கள்.
இதேபோல இலங்கையில் உள்ள எந்த சமூகத்திற்கும் தேவையான எந்த ஆதரவையும் வழங்க நான் தயார்.
எனக்கு 47 வயது,நாங்கள் எங்கள் வரலாற்றில் பல நெருக்கடியான தருணங்களை கடந்துவந்துள்ளோம்,70கள்மற்றும் 80 களில் கலவரங்கள் இடம்பெற்றன.நூற்றுக்கணக்கான சிங்களவர்களும் தமிழர்களும் கொல்லப்பட்டனர்.
ஆனால்அனைத்துதமிழர்களும் சிங்களவர்களும் மோசமானவர்கள் என்பது இதன் அர்த்தம் இல்லை.ஒரு சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள் மோசமானவர்கள் என்பதும் இதன் அர்த்தம் இல்லை.
கேள்வி-
தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளில் அனேகமானவர்கள் ஜனாதிபதி ராஜபக்சவிற்கு எதிரானவர்கள்,நீங்கள் திருமணம் செய்துள்ளதால் தமிழ்நாடு உங்களிற்கு இரண்டாவது தாயகம்.ராஜபக்சவிற்கான நெருக்கத்தை எப்படி தமிழ்நாட்டு மக்களிற்கு நீங்கள் தெளிவுபடுத்துவீர்கள்?
பதில்-
உங்கள் குடும்பத்திற்குள் பிரச்சினைகள் இருந்தால் உங்கள் அயலவர்கள் தலையிடுவார்களா? எனக்கு பதில் சொல்லுங்கள்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இலங்கையர்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்வதில்லை.எங்கள் அரசாங்கம் ஆட்சி புரிவதற்கு அவர்கள் அனுமதிக்கவேண்டும்.
எங்கள் நாட்டை ஆட்சி புரிவதற்கு தகுதியானவர் என்பதால் நான் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கின்றேன்.
அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது,எதுவும் முன்னோக்கி நகரவில்லை.
ஜனாதிபதி ராஜபக்ச ஒரு நிர்வாகி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இராணுவத்தை சேர்ந்தவர்.
அவர் சீர்திருத்தங்களை முன்னெடுக்க கூடிய, வேறு விதமான பாதையை உருவாக்ககூடிய,வாழ்க்கையில் முன்னேற்றங்களை ஏற்படுத்தக்கூடிய,சரியான விடயங்களை செய்யக்கூடிய திறமையான நபர்.