இலங்கை கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி: கேள்விக்குறியாகிறதா தகவலறியும் உரிமை சட்டம்?
01 Dec,2019
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னணியில், இலங்கையில் தகவலறியும் உரிமை தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக இணையத்தள ஊடகவியலாளர் தேசிய அமைப்பு தெரிவிக்கின்றது.
பிபிசி தமிழுக்குப் பிரத்தியேகமாக வழங்கிய பேட்டியில் அந்த அமைப்பின் தலைவர் சத்துரங்க அல்விஸ் இதனைத் தெரிவிக்கின்றார்.
பொலிஸ் ஊடகப் பிரிவு மூடப்படுவதன் ஊடாக தகவலறியும் உரிமை ஊடகவியலாளர்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் மறுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
பொலிஸ் ஊடகப் பிரிவிற்கு பதிலாக இராணுவ ஊடகப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும், அது எந்தளவிற்குச் சாத்தியமாகும் என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் சந்தேகம் தெரிவிக்கின்றார்.
பொலிஸ் ஊடகப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை இராணுவத்தின் ஊடகப் பிரிவினால் முன்னெடுக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
இலங்கையில் ஜனநாயக உரிமையுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகச் செயற்படும் ஒரு நிறுவனமாக பொலிஸ் திணைக்களம் உள்ளதாகவும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அருகிலிருந்து நிவர்த்தி செய்யும் கடமை பொலிஸார் வசமே காணப்பட்டதாகவும் சதுரங்க அல்விஸ் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு மக்களுடன் மக்களாக இருந்து செயற்படும் பொலிஸாரிடமிருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய தகவல்களை, எவ்வாறு இராணுவத்தினால் வழங்க முடியும் என அவர் கேள்வி எழுப்புகின்றார்.
கடந்த அரசாங்கத்தினால் தகவலறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், அதனூடாக பல கேள்விகளுக்கான பதிலை ஊடகவியலாளர்கள் மாத்திரமன்றி, சாதாரண பொதுமக்களினால் கூடப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாகவும் சந்துரங்க அல்விஸ் குறிப்பிடுகின்றார்.
எனினும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தும் போது, தகவலறியும் உரிமைச் சட்டம் நடைமுறையில் காணப்பட்டாலும், அதனூடாக பெற்றுக் கொள்ளக்கூடிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் தோன்றியுள்ளதாக அவர் கவலை வெளியிடுகின்றார்.
நம்பிக்கை வைக்க முடியாத வகையில் நாட்டை தற்போது முன்னோக்கிக் கொண்டு சென்று கொண்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இலங்கையில் கொலை, கொள்ளை, வாகன விபத்துக்கள் என எதுவும் இடம்பெறவில்லை என்பதனை வெளிப்படுத்தும் நோக்குடனேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கோட்டாபயவினால் இணைய ஊடகத்திற்கு அச்சுறுத்தலா?
இலங்கையில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட யுகம், 2019ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூற வேண்டியுள்ளதென இணையத்தள ஊடகவியலாளர் தேசிய அமைப்பின் தலைவர் சத்துரங்க அல்விஸ் கூறுகின்றார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய அரசாங்கமொன்றைக் கொண்டு வருவதற்காக இணையத்தள ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் பாரிய பங்களிப்பை வழங்கியதாக அவர் நினைவூட்டினார்.
2015ஆம் ஆண்டு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட அனைவரும் மறைந்திருந்த நிலையிலேயே செயற்பட்டு மாற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.
எனினும், இந்த ஆட்சி மாற்றத்தின் போது சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மற்றும் இணையத்தள பயன்பாட்டாளர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி பணியாற்றக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
கடந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்த சந்தர்ப்பத்தில் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதனைத் தடுக்க அப்போதைய அரசாங்கம் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காது சுதந்திரத்தை வழங்கியிருந்ததாகவும் சத்துரங்க அல்விஸ் குறிப்பிடுகின்றார்.
எனினும், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதிக்குப் பின்னர் மீண்டும் பழைய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
ஜனநாயகத்திற்கு எதிராகச் செயற்படுகின்ற அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களைத் தடுத்து நிறுத்துவதற்கான தேவை இந்த அரசாங்கத்திற்கு எழுந்துள்ளதாக சத்துரங்க அல்விஸ் குறிப்பிடுகின்றார்.
ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை?
பல ஊடகவியலாளர்களுக்கு தொலைபேசி ஊடாகவும், வேறு விதத்திலும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக இணையத்தள ஊடகவியலாளர் தேசிய அமைப்பின் தலைவர் சத்துரங்க அல்விஸ் தெரிவிக்கின்றார்.
நியூஸ் ஹப் நிறுவனத்தை பொலிஸார் சோதனையிட்டமை, த லீடர் நிறுவனத்தின் ஊடகவியலாளரிடம் விசாரணை நடத்தியமை மற்றும் சுயாதீனு இணையத்தள பெண் ஊடகவியலாளர் ஒருவரிடம் விசாரணை நடத்தியமை போன்றவற்றை சத்துரங்க அல்விஸ் நினைவூட்டினார்.
அத்துடன், மேலும் சில ஊடகவியலாளர்களிடம் விசாரணைகளை நடத்துவதற்கான தயார் நிலை ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையிலேயே சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியொருவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையும் சத்துரங்க அல்விஸ் நினைவூட்டினார்.
அரசாங்க ஊடக நிறுவனங்களில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள், இணையத்தள ஊடகவியலாளர்கள், சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் என அனைவரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இராஜதந்திர ரீதியிலான அதிகாரியொருவரே கடத்தப்பட்டுள்ள பின்னணியில், சாதாரண ஊடகவியலாளர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளதாக இணையத்தள ஊடகவியலாளர் தேசிய அமைப்பின் தலைவர் சத்துரங்க அல்விஸ் தெரிவிக்கின்றார்.
குற்றச்சாட்டை மறுக்கின்றது இலங்கை அரசாங்கம்
இலங்கை அரசாங்கத்தினால் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகக் கூறப்படும் கருத்தானது உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கம் தெரிவிக்கின்றது.
மின்சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.
தேர்தல் காலப் பகுதியில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்து சிறிது காலத்திலேயே நிறைவேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளமையை பொறுத்துக்கொள்ள முடியாத தரப்பினரே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும் அவர் கூறினார்.
தகவலறியும் உரிமைக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாது என அவர் குறிப்பிட்டார்.
தமது ஆட்சியில் ஊடகங்களுக்கு முழுமையாகச் சுதந்திரம் கிடைக்கும் என மின்சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நம்பிக்கை வெளியிட்டார்.