இலங்கையில் சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விட்ட துறைமுக ஒப்பந்தம் ரத்து
29 Nov,2019
இலங்கையில் சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விட்ட துறைமுக ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோத்தபய அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கை ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவின் தனியார் நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கியுள்ளது. முன்னாள் அதிபர் சிறிசேனா அரசு இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டில் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்ரசிங்கே அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த துறைமுகத்தை போர்க்கப்பல் நிறுத்தும் தளமாக சீனா மாற்றும். இதனால் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. அதை சீனா மறுத்தது.
இந்தியா - ஐரோப்பியா கண்டத்தை இணைக்கும் பாலமாக இத்துறைமுகம் நிகழும். இதன்மூலம் வர்த்தகம் மேம்படும். இலங்கையின் பொருளாதாரம் மேம்படும் என விளக்கம் அளித்தது.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக இத்துறைமுகம் சீனாவுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அங்கு ராணுவ தளம் அமைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் இலங்கை அரசு கூறி வந்தது.
சமீபத்தில் இலங்கை அதிபர் தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபரானால் ஹம்பந்தோடா துறைமுக குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என உறுதி அளித்து இருந்தார்.
அதன்படி இலங்கையின் அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே அரசு ஹம்பந்தோடா துறைமுக குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
இத்தகவலை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் பொருளாதார ஆலோசகர் அஜித் நிவார்ட் கபிரால் தெரிவித்துள்ளார். இவர் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் கவர்னராக இருந்தார்.
கொழும்பு புறநகரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, ஹம்பந்தோடா துறைமுக 99 ஆண்டு குத்தகை திட்டத்தை திரும்ப பெற இருக்கிறோம் என்றார்.
மகிந்த ராஜபக்சே கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை அதிபராக பதவி வகித்தார். அவரது அரசில் கோத்தபய ராஜபக்சே ராணுவ மந்திரி ஆக இருந்தார். அப்போது இவர்களது அரசு சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டது. சீனாவுக்கு பல்வேறு திட்ட பணிகள் வழங்கப்பட்டன.
தற்போது மீண்டும் ராஜபக்சே குடும்பத்தினரின் ஆட்சி ஏற்பட்ட நிலையில் சீனாவின் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோத்தபய தனது அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். அதிபராக பொறுப்பேற்றதும் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார். ஹம்பந்தோடா துறைமுக குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியா - இலங்கை இடையேயான உறவு மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது