மகிந்த ராஜபக்சேவுக்கு நிதி மந்திரி பொறுப்பை ஒதுக்கினார் அதிபர் கோத்தபய ராஜபக்சே
22 Nov,2019
இலங்கை பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்சேவுக்கு நிதி மந்திரி பொறுப்பை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒதுக்கினார்.
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே (வயது 70), வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் அதிபர் பதவியை ஏற்றார்.
இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே 20-ம் தேதி பதவி விலகினார். அதை தொடர்ந்து, மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார். அவருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் இலங்கையின் இடைக்கால அமைச்சரவை இன்று பதவியேற்று கொண்டது. தனது சகோதரர்களான மகிந்த ராஜபக்சே மற்றும் சமல் ராஜபக்சேவுக்கு முக்கிய பொறுப்புகளை அதிபர் கோத்தபய ராஜபக்சே அளித்துள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு, நிதித்துறை, பொருளாதார விவகாரம், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் சப்ளை மற்றும் புத்த மத விவகாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சகோதரரான சமல் ராஜபக்சேவிற்கு விவசாயம், நீர்பாசனம், உள்நாட்டு வர்த்தகம், நுகர்வோர் விவகாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கோத்தபய ராஜபக்சே சகோதரர்களுக்கு முக்கிய பதவி அளிக்கப்பட்டது இலங்கையின் ஒட்டு மொத்த அதிகாரமும் ராஜபக்சே குடும்பத்தின் கைகளில் சென்றுவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.