சிங்கள பௌத்த வாக்குகளை மட்டும் பெற்றவர்கள் என்ற நிலையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருப்பதானது, அவருக்கு ஒரு இழுக்கான விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பிபிசி தமிழுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை கோட்டாபய ராஜபக்ஷ அறிந்திருப்பது நல்லதொரு விடயம் எனவும், அதற்கான காரணத்தையும் அவர் அறிந்திருக்க வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார்.
இந்த விடயம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சனையை தீர்த்துக்கொள்வதற்கு தமிழ் மக்களின் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதனை தீர்த்துக்கொள்ள உடன் முன்வர வேண்டும் என கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவர் அழைப்பு விடுக்கின்றார்.
அவ்வாறாயின், பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி பெற்ற ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிக்க தாம் தயாராகவே உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்பின் போது தமிழர்கள் குறித்து கூறிய கருத்தை தான் நல்ல கருத்தாகவே எடுப்பதாக அவர் கூறுகின்றார்.
தனக்கு தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்பதை கோட்டாபய ராஜபக்ஷ தெளிவாக உணர்ந்து, அதனை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அதற்கான நிவாரணத்தை சரியான முறையில் செயற்படுத்த வேண்டும் எனவும் சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.
கோட்டாபய ராஜபக்ஷ தமிழர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பாரா?
தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கின்றதாக தன்னால் கூற முடியாது என எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார்.
நாட்டை ஆட்சி செய்த பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய வரலாற்றில் முதற்தடவையாக இணைந்து ஆட்சி செய்த போதே தமிழர்களுக்கான தீர்வு கிடைக்காத நிலையில், தற்போது அந்த நம்பிக்கை உள்ளதா என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்து ஆட்சி செய்த சந்தர்ப்பத்தில் தாம் அந்த அரிய சந்தர்ப்பத்தை உரிய வகையில் உபயோகித்ததாக அவர் கூறுகின்றார்.
தீர்வு விடயமானது முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என்றாலும், அந்த நடவடிக்கையில் தாம் வெகு தூரம் பயணித்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
அதன் பிரதிபலனாகவே அரசியலமைப்பின் புதிய வரைவொன்றை வெளியிட முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
தமிழர் தீர்வு விடயத்தில் ஒன்று செய்யவில்லை என கூற முடியாது என குறிப்பிட்ட சுமந்திரன், அந்த இறுதித் தருணத்திலேயே இரண்டு கட்சிகளும் பிரிந்து அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாது போன ஒரு சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.
இந்த தீர்வுத்திட்டத்தை விடுப்பட்ட இடத்திலிருந்து முன்னோக்கி கொண்டு செல்வதாக சஜித் பிரேமதாஸ வழங்கிய உறுதிமொழியினாலேயே தாம் அவரை ஆதரித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், தமிழ் தேசிய பிரச்சனை தொடர்பில் கருத்து வெளியிடாத ஒருவர் ஜனாதிபதியாக தெரியாகியுள்ளதாகவும், கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.
இதன்படி, இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளிலேயே அதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.
அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே ஏற்றுக் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார்.
மஹிந்தவிடமே தீர்வு குறித்து பேச வேண்டும் - கோட்டாபய தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களது அனுமதியுடன் தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ஷவை தேர்தலுக்கு முன்னர் பல தடவை சந்தித்து கலந்துரையாடியதாக எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார்.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமே கலந்துரையாட வேண்டும் என கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்ததாக சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், அனைத்து மக்களையும் சரிக்கு சமமாக நடத்துதல், வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தே தன்னுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் அவர் கூறினார்.
அரசியல் தீர்வை வழங்கும் பொறுப்பு மஹிந்த ராஜபக்ஷவிடம் உள்ளதாக கூறப்பட்ட போதிலும், தான் அவரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பங்களில் அவர்கள் வெவ்வேறு விடயங்களை வெளியிட்டாரே தவிர, அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் கலந்துரையாடவில்லை என சுமந்திரன் தெரிவிக்கின்றார்.
தமிழர்கள் தீர்வு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிடம் தெளிவான தன்மை இருந்ததாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் தெளிவான தன்மை இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அதிகார பகிர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றதா?
இலங்கையில் போலீஸ் அதிகாரம் முழுமையாக இருப்பதாகவும், காணி அதிகாரமே முழுமை பெறவில்லை எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.
அத்துடன், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் ஏற்கனவே உள்ள விடயம் என்பதனால், எந்தவித அரசியலமைப்பு திருத்தங்களும் இன்றி அதனை முழுமையாக அமல்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
13ஆவது திருத்தத்திற்கும் அப்பால் சென்று தீர்வொன்றை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தவர் மஹிந்த ராஜபக்ஷ என அவர் கடந்த கால விடயங்களை மேற்கோள்காட்டி கூறினார்.
இந்த வாக்குறுதியானது, மூன்று தடவைகள் எழுத்துமூலம் இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதி என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ கூறிய விதத்திலேயே அதனை செய்ய வைக்க வேண்டிய தேவை தமக்கு உள்ளதாகவும், அதனையே இனிவரும் காலங்களில் தாம் கையாள வேண்டும் எனவும் சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.
இந்தியாவின் தலையீடு
இந்தியா - இலங்கை ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றமையினால், இந்தியாவின் ஈடுபாடு தொடர்ந்தும் காணப்படும் என எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார்.
இந்த விடயம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ நன்கறிவார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டால் முதலில் வாழ்த்து சொல்வது இந்தியா எனவும், இலங்கையில் தெரிவாகும் ஜனாதிபதியும் இந்தியாவிற்கே முதலில் பயணம் செய்வார் எனவும் அவர் கூறுகின்றார்.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிற்கான விஜயத்தில் ஈடுபடும் போது, தேர்தல் முடிவுகளே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு இன்னும் இல்லை என்பதை காட்டுகின்றது என இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கூறுவார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தமிழர் பிரச்சினைக்கான தீர்வை செய்ய வேண்டும் என இந்திய பிரதமர், கோட்டாபய ராஜபக்ஷவை வலியுறுத்துவார் எனவும் அவர் கூறுகின்றார்.
அதன்பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், இதுவே காலம் காலமாக நடைபெற்று வருகின்ற விடயம் எனவும் அவர் நினைவூட்டினார்.
தமிழர் பிரச்சனை விவகாரத்தில் இந்தியா மேலும் கூடுதலான ஈடுபாட்டை காட்ட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
காணாமல் போனோர் விவகாரம்
யுத்தக் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் முன்னேற்றகரமான பல செயற்றிட்டங்கள் கடந்த நான்கரை வருடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள், காணாமல் போனோரை கண்டறிவதற்கான அலுவலகங்கள் என்பன கடந்த ஆட்சியின் போதே ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளமையினால், அந்த அலுவலகங்களின் செயற்பாடுகள் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதே தமது எண்ணம் எனவும், புதிய அரசாங்கம் அதற்கான இடத்தை வழங்குமோ, இல்லையோ என தமக்கு தெரியாது எனவும் அவர் கூறுகின்றார்.
எது எவ்வாறாயினும், காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் தொடர்ந்தும் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மஹிந்த ராஜபக்ஷ 2009 முதல் 2015ஆம் ஆண்டு வரை ஆட்சியின் இருந்த சந்தர்ப்பத்திலும் தாம் வலுவான அழுத்தங்களை கொடுத்ததாக கூறிய அவர், அந்த சந்தர்ப்பத்திலேயே ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர் நாட்டின் ஜனாதிபதியாக வந்துவிட்டார் என்பதற்காக, தாம் வழங்கும் அழுத்தங்களை விடப்போவதில்லை என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 20 உறுப்பினர்களை பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்குமானால், வரவுள்ள ஆட்சியில் தவிர்க்க முடியாத சக்தியாக தாம் மாற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
இவ்வாறான சந்தர்ப்பம் கிடைக்குமாக இருந்தால், தமது இலக்கை நோக்கி இலகுவாக நகர முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்