தேர்தல் செலவு 5,500 மில்லியன் ரூபாய் – வேட்பாளர்களின் செலவு 10,000 மில்லியன் ரூபாய்
                  
                     15 Nov,2019
                  
                  
                     
					  
                     
						
	
	 
	ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான மொத்த செலவு 5500 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
	இதன் அடிப்படையில் ஒரு வாக்காளருக்காக இம்முறை தேர்தல்கள் ஆணைக்குழுவால் 344 ரூபாய் செலவிடப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
	இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்துக்கு செலவிட்டதாக மதிப்பிடப்படும் மொத்த தொகை 10 ஆயிரம் மில்லியன் ரூபாயாகும். அதன்படி ஒரு வாக்காளருக்காக தொடர்பாக வேட்பாளர்கள் செலவிட்ட தொகை 625 ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
	தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ தகவல்களின் பிரகாரம், கடந்த 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் மொத்த செலவு 715 மில்லியன் ரூபாயாகும். அப்போது ஒரு வாக்காளருக்கு செலவிடப்பட்ட தொகை 54 ரூபாயாகும். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக 1856 மில்லியன் ரூபாயை தேர்தல்கள் திணைக்களம் செலவிட்டுள்ளது.
	இதன்போது வாக்காளர் ஒருவருக்கு 132 ரூபாய் செலவாகியுள்ளது. அதனடிப்படையில் 2015 ஆம் ஆண்டில் 2706 மில்லியன் ரூபாயை தேர்தல்கள் திணைக்களம் ஜனாதிபதி தேர்தலுக்காக செலவிட்டுள்ள நிலையில், அப்போது ஒரு வாக்காளருக்காக 180 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
	இந்நிலையிலேயே இம்முறை ஜனாதிபதி தேர்தல் செலவீனம் 5500 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
	அதன்படி இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்பாளர்களும், தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஒரு வாக்காளருக்காக செலவிட்ட மொத்த செலவு 965 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.