இன்று முதல் யாழில் இருந்து இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விமான சேவை
                  
                     11 Nov,2019
                  
                  
                     
					  
                     
						
	இன்று முதல் யாழில் இருந்து இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விமான சேவை
	
	யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ விமான சேவைகள் இன்று திங்கட்கிழமை  முதல்  ஆரம்பமாகின்றது.
	சென்னையிலிருந்து முதலாவது விமானம் இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
	முதல் கட்டமாக வாரத்திற்கு மூன்று சேவைகள் இடம்பெறவுள்ளன. அகை திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் நடத்தப்படும்.
	பின்னர் படிப்படியாக நாளாந்தசேவையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர் நாயகம் எச்.எம். சி. நிமலசிறி தெரிவித்துள்ளார்.
	யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது..
	இந்த வைபவத்தில் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுண ரணத்துங்க  இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன் ஜித் சிங் சந்து ஆகியோரும் கலந்துகொண்டனர்.
	அன்றைய தினம் எயார் இந்திய விமான துணை நிறுவனமான அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் ஏ.பி. ஆர். 72600 ரக விமானம் முதல் முறையாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.
	இந்த விமானத்தில் ஏயார் இந்திய நிறுவன தலைவர் அஷ்வான் ரொஹானி, நிறைவேற்றுப்பணிப்பாளர்  சீ.எஸ்.சுப்பையா  உட்பட  30  பேர் குறித்த விமானத்தில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
	தற்போதைய யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்  இரண்டாம் உலக யுத்ததின் போது பிரிட்டிஸ் இராணுவத்தினால் அமைக்கப்பட்டது.
	1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி  பலாலிக்கும் இரத்மலானைக்கும் இடையில் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1976ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் விமானப்படை முகாம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.