கடத்தல் – 7 இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மீது குற்றப்பத்திரம் தாக்கல்
10 Nov,2019
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஏழு பேருக்கு எதிராக, சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியான அரச சட்டவாளர் நிஷார ஜெயரத்ன, இதுகுறித்து ஊடகங்களுக்கு தகவல் வெளியிடுகையில், கிரித்தல இராணுவ முகாமைச் சேர்ந்த ஏழு புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக, ஹோமகம மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் ஏற்கனவே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த கடத்தல் வழக்கில், லெப்.கேணல் ஷம்மி அர்ஜூன் குமாரரத்ன, லெப்கேணல் பிரபோத சிறிவர்த்தன, மற்றும் நாதன் எனப்படும் ஆர்எம்பிகே ராஜபக்ச, பிரியந்த உபசேன, எம்எம் ரவீந்திர ரூபசிங்க, எஸ்கே உலுகெதர, எஸ்ஏ ஹேமச்சந்திர ஆகிய புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தினர், கடத்தலுக்கு சூழ்ச்சி செய்தனர் என்று குற்றவியல் சட்டக் கோவையின், 102, 113 (A), 356 பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குள்ள தொடர்புகள் தொலைபேசி உரையாடல் விவரங்களை ஆராய்ந்த பின்னர் தெரியவந்துள்ளது