இலங்கையில் வெளிநாட்டு பெண்ணை கொன்ற நபருக்கு பொது மன்னிப்பு – சர்ச்சையில் சிக்கிய மைத்திரிபால சிறிசேன
10 Nov,2019
சுவீடன் நாட்டு பெண் ஒருவரை கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு வாரம் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், கொலை குற்றவாளியொருவரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளார்.
இவோன் ஜோன்சன் என்ற இளம் பெண்ணை கொலை செய்த வழக்கின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஜுட் ஷரமந்த ஜெயமஹா என்ற இளைஞர் கைது செய்யப்பட்ட அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவோன் ஜோன்சன் கொலை மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு
ரோகர் ஜோன்சன் என்ற சுவீடன் நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும், ஷமல்கா ஜோன்சன் என்ற இலங்கையைச் சேர்ந்த தாய்க்கும் மகளாக பிறந்தவரே இவோன் ஜோன்சன்.
இவோன் ஜோன்சன் லண்டனில் கல்வி கற்றதுடன், தனது சகோதரியுடன் கொழும்பின் புறநகர் பகுதியான ராஜகிரிய பகுதியிலுள்ள ரோயல் பார்க் நட்சத்திர அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், 19 வயதான இவோன் ஜோன்சன் 2005ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.
ஆடையொன்றில் கழுத்து நெரிக்கப்பட்டு, இவோன் ஜோன்சனின் தலையை தரையில் மோதி இந்த கொலை இடம்பெற்றுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் ஜுட் ஷரமந்த ஜெயமஹா கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 2005ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில், 2012ஆம் ஆண்டு இந்த வழக்கிற்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இதன்படி, குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஜுட் ஷரமந்த ஜெயமஹாவிற்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக முறைப்பாட்டாளர் தரப்பு 2012ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தது.
இதன்படி, ஜுட் ஷரமந்த ஜெயமஹாவிற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
குற்றவாளி தரப்பினர் இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம், மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை 2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் 9ஆம் தேதி உறுதிப்படுத்தியது.
எவ்வாறாயினும், 2016ஆம் ஆண்டு ஜுட் ஷரமந்த ஜெயமஹாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை, ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
ஜுட் ஷரமந்த ஜெயமஹா பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை
குற்றவாளியாக உயர் நீதிமன்றத்தினாலும் அடையாளம் காணப்பட்ட ஜுட் ஷரமந்த ஜெயமஹா ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் நேற்றைய தினம் ( நவம்பர் 09) விடுதலை செய்யப்பட்டார்.
அவரை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கிடைக்கப் பெற்றதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டி.எம்.ஜே.டபிள்யூ.தென்னக்கோன் தெரிவிக்கின்றார்.
இதன்படி, ஜுட் ஷரமந்த ஜெயமஹா இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையின் சிறை வைக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை அவர் சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
இவோன் ஜோன்சன் சகோதரியின் கேள்வி
தனது சகோதரி கொலை செய்யப்பட்ட விதத்தை அறிந்தும், குற்றவாளியான ஜுட் ஷரமந்த ஜெயமஹாவை மன்னிக்க தகுதியானவரா என அவரது சகோதரியான கேரோலின் ஜோன்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனது சகோதரி கொலை செய்யப்பட்ட விதத்தையும் அவர் இந்த பதில் விவரித்துள்ளதுடன், அந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
கொலையாளி தனது சகோதரியை கொலை செய்ததன் பின்னரும், இவோன் ஜோன்சனின் தலையை தரையில் 64 தடவைகள் அடித்து தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் இரத்த சாட்சியங்களை நீச்சல் தடாகத்தில் கழுதி, சாட்சியங்கள் அனைத்தையும் இல்லாது செய்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
குற்றவாளி தப்பிச் செல்லும் நோக்குடன் விமான டிக்கெட் ஒன்றையும் அப்போதே கொள்வனவு செய்திருந்ததாக கேரோலின் ஜோன்சன் கூறியுள்ளார்.
தனது சகோதரி மது அருந்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போதிலும், பிரேத பரிசோதனைகளில் அந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் நினைவுக்கூறினார்.
சகோதரியின் கொலைக்கான நீதியை கோரி தொடர்ந்தும் போராடுவதாகவும் இவோன் ஜோன்சன் சகோதரியான கேரோலின் ஜோன்சன் கூறியுள்ளார்.