’ராஜபக்ஷர் ஆட்சியில் ஈக்களைப் போல் மக்கள் கொல்லப்பட்டனர்’
                  
                     26 Oct,2019
                  
                  
                     
					  
                     
						
	
	
	 
	
	ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட போன்றவர்களை கொலைச் செய்யும் எண்ணம் ராஜபக்ஷர்களை தவிர வேறெவருக்கும் இருக்கவில்லையெனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, ராஜபக்ஷர்களின் ஆட்சியில்தான், ஈக்களை போன்று மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர் என்றார்.
	அதேபோல், ராஜபக்ஷர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கான இறுதி தருணமாக, அடுத்த ஜனாதிபதி தேர்தலே காணப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்தார்.
	புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் நேற்று (24)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,  ஜனநாயக நாட்டுக்கு சர்வாதிகார ஆட்சியாளர் ஒருவர் அவசியமா? என்ற பிரச்சினையே இன்றளவில் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
	“அதேபோல் பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பு எம்.பியாக துமிந்த சில்வா இருந்த காலத்திலேயே கொலன்னாவ பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரம் பலப்படுத்தபட்டதாகத் தெரிவித்த அவர்,  அது குறித்து பலமுறை மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்தும்  அவர் பொருட்படுத்தவில்லை” எனவும் சாடினார்.
	“எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ முன்பாக, தான் அமர்ந்திருந்த போதுதான், தனது தந்தையான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவுக்கு முடிவு கட்ட வேண்டுமென கோட்டாபய  ராஜபக்ஷ  கூறினாரென, குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வழங்கியிருந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்
	“அதேபோல், மஹிந்த ராஜபக்ஷவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் பதவி வழங்க விரும்பாத போது, பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவே அழுத்தம் கொடுத்து பிரதமர் பதவியை மஹிந்தவுக்கு பெற்றுகொடுத்தார்” எனவும் தெரிவித்தார்.