அரச நிறுவனங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முடியாது – கோட்டா!
                  
                     23 Oct,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	அரச நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றி அமைக்க வேண்டும். அந்த நிறுவனங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
	கடுவலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
	இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஆட்சிக்கு வந்த பின்னர் ஒழுக்கமுள்ளதும், வெளிப்படையானதும், சுறுசுறுப்புடன் இயங்கக் கூடிய அரசாங்கம் ஒன்றை அமைப்பேன்.
	எனது ஆட்சியில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் வேலை செய்யக்கூடிய இயலுமை உள்ளவர்களை மாத்திரம் நியமிப்பேன். அவர்களுக்கு குறிப்பிட்ட இலக்கு ஒன்றை வழங்கி அதனூடாக அவர்களின் தரத்தை பரிசோதிப்பேன்.
	அரச நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றி அமைக்க வேண்டும். அந்த நிறுவனங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முடியாது.
	முன்பு நகர அபிவிருத்தி அதிகார சபை, கீழ்மட்ட நில மேம்பாட்டு அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் மூலம் பாரிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
	அதற்கமைய இவ்வாறான நிறுவனங்களை திறைசேரிக்கு சுமை வழங்காத இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றியமைப்பேன்.
	நாடு முன்னேற வேண்டுமானால், முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும். அதற்கு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
	பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்ததை போல நாட்டில் இன்று தலைதூக்கி உள்ள தீவிரவாதத்தை ஒழிக்க தேவையான அனைத்து பாதுகாப்பு திட்டங்களும் முன்னெடுக்கப்படும்.
	முன்னர் முப்படையினரையும், பொலிஸாரையும் ஈடுபடுத்தி பாதுகாப்பான நாடு ஒன்று உருவாக்கினேன்.
	ஆகவே வெளிநாட்டு சக்திகளுக்கு அடிமையாகாத, புதிய தாராளமய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நாட்டுக்குள் அனுமதிப்பதால் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாது.
	எம்மை நேசிக்கும், எமக்கு மதிப்பளிக்கும் நாடுகளுக்கு மாத்திரமே அதனை செய்ய முடியும். சவால்களை வெற்றிக் கொள்ளும் ஒரு பிரிவினரே நாம்’ எனத் தெரிவித்துள்ளார்