கோட்டாபாய ராஐபக்ஷவை கைது செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்
23 Oct,2019
பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஐபக்ஷவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பானத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் யாழ்ப்பாண மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இப்போராட்டம் இன்று காலை யாழ்ப்பாணம் கல்வியங்காடு ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.
குறித்த ஆலயத்தின் முன் ஒன்று கூடிய வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை ஆரம்பித்து, அங்கிருந்து யாழ்ப்பாணம் ஆடிய பாதம் வீதியில் உள்ள காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றிருந்தனர்.
பின்பு காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்பாக சுமார் ஒரு மணித்தியாலம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்,
கோட்டாபய ராஜபக்ஷவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும் என்றும், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தேவையில்லை எனவும் கோஷங்களை எழுப்பினர்.
ஐ.நா. அமைதிப்படை இலங்கை வர வேண்டும், பயனற்ற காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை அகற்றவேண்டும், கோட்டாபயவை கைது செய்யவேண்டும், குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் நிறுத்தப்பட்டு, பக்கச் சார்பற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்பது போன்றவற்றை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியும் பதாதைகளை தாங்கியும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.