பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ விளக்கமறியலில்
11 Oct,2019
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களைக் குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மேல் நீதிமன்ற உத்தரவையடுத்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றினால் நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டதை ஆட்சேபித்து சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் மீளாய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அம்மனு மீதான தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டதையடுத்தே குறித்த இருவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.
கடந்த ஜூலை 9 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் வழங்கிய பிணை உத்தரவு தவறானது என்பதை சுட்டிக்காட்டும் 7 விடயங்களை உள்ளடக்கி சட்ட மா அதிபர் மீளாய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களு ஆரச்சி முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
சந்தேக நபர்களான ஹேமசிறி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும் பூஜித் ஜயசுந்தர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தெகொடவும் ஆஜராகி வாதிட்டனர். சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் வாதிட்டிருந்தார்.
பிரதான நீதிவான் சட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளமை, சம்பவ சான்றுகளை மையப்படுத்தி முன்வைக்கப்பட்ட தண்டனை சட்டக் கோவையின் 296 ஆம் அத்தியாயத்தின் கீழ் குற்றச்சாட்டு சுமத்த முடியாது எனக் கூறியமை உறுதியான உளவுத்தகவல்களை தெளிவற்ற உளவுத் தகவல்கள் என தனது தீர்ப்பில் குறிப்பிடல், சந்தேக நபர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அறிக்கையை மையப்படுத்தியே கைது செய்யப்பட்டதாக நீதிவான் தீர்ப்பில் தெரிவித்தமை, அடிப்படையற்ற பக்கச்சார்பான உத்தரவு, சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மட்டுமே செயற்பட வேண்டுமில்லை என நீதிவான் கூறியுள்ள விதம் உள்ளிட்ட 7 விடயங்களை மையப்படுத்தி சட்ட மா அதிபரால் மீளாய்வு மனு தொடர்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
எனினும் சந்தேக நபர்கள் தரப்பில் நீதிவானின் உத்தரவு சரியானதே என வாதிடப்பட்டது. இந்த பின்னணியிலேயே குறித்த மீளாய்வு மனு தொடர்பில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன்போது கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி நீதிவான் லங்க ஜயரத்ன வழங்கிய பிணைத் தீர்ப்பு தவறானது எனவும் அதனை இரத்துச் செய்வதாகவும் மேல் நீதிமன்றம் அறிவித்தது.
அதனால் ஜூலை 9 ஆம் திகதி பிணை தீர்ப்புக்கு முன்னர் இருந்த நிலைமையே சந்தேக நபர்கள் இருவர் தொடர்பிலும் செல்லுபடியாகும் எனவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிடுவதாகவும் மேல் நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்படும் போது ஹேமசிறி பெர்னாண்டோவும், பூஜித் ஜயசுந்தரவும் மேல் நீதிமன்றிலேயே இருந்த நிலையில் அவ்விருவரையும் உடனடியாக தமது பொறுப்பில் எடுத்து நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி களுஆராச்சி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி சிறை அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்ட இருவரும் நேற்று பிற்பகல் கொழும்பு பிரதான நீதிவான் லங்க ஜயரத்ன முன் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதன்போது, கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன ‘ மேல் நீதிமன்றின் தீர்ப்புக்கு அமைய முன்னர் வழங்கப்பட்ட பிணை உத்தரவு இரத்துச் செய்யப்படுகிறது.
அத்துடன் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விடயங்களின்படி கடந்த ஜூலை 9 ஆம் திகதிக்கு முன்னர் சந்தேக நபர்கள் இருந்த நிலைமையே செல்லுபடியாவதால் அத்தீர்ப்புக்கு அமைய இருவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுகின்றேன் என்றார்.
இதனையடுத்து குறித்த இரு சந்தேக நபர்களும் வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முன்னதாக ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கடந்த ஜூலை 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
தண்டனை சட்டக் கோவையின் 296, 298, 326,327, 328 மற்றும் 410 ஆம் அத்தியாயங்களின் கீழ் இவர்கள் இருவரும் தண்டனைக் குரிய குற்றம் ஒன்றை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமைள்ளமை குறிப்பிடத்தக்கது.