இலங்கையில் வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, முஸ்லிம் மற்றும் தமிழர் சமூகங்களைச் சேர்ந்த ஆறு பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு மொத்தமாக 41 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், முஸ்லிம்கள் நால்வரும், தமிழர்கள் இருவரும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இவர்களில் ஐவர் சுயேட்சையாகவும், ஒருவர் அரசியல் கட்சியொன்று சார்பாகவும் கட்டுப்பணம் செலுத்தியிருக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், இல்யால் ஐதுரூஸ் முகம்மட், முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அலவி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் ஊடகவியலாளர் எஸ். குணரத்னம் ஆகியோரே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணம் செலுத்தியுள்ள முஸ்லிம் மற்றும் தமிழர்களாவர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, கட்டுப்பணம் செலுத்துவதற்குரிய காலம், அக்டோபர் 6-ஆம் தேதி பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலொன்றில் நபரொருவர் போட்டியிடுவதாயின், அவர் கட்சியொன்று சார்பில் வேட்புமனுவை தாக்கல் செய்தல் வேண்டும். அல்லது சுயேட்சையாகப் போட்டியிடுவதாயின் குறித்த நபர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்திருத்தல் அவசியமாகும்.
கட்சி சார்பில் போட்டியிடும் ஒருவர் 50 ஆயிரம் ரூபாயும், சுயேட்சையாகப் போட்டியிடும் ஒருவர் 75 ஆயிரம் ரூபாயும் கட்டுப்பணமாகச் செலுத்த வேண்டும்.
அந்த வகையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகத்திலிருந்து கட்டுப்பணம் செலுத்திய மேற்படி நபர்கள் யார்? இவர்களின் விவரங்கள் என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்.
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா
இலங்கையின் கிழக்கு மாகாணம் காத்தான்குடியை சொந்த இடமாகக் கொண்ட ஹிஸ்புல்லா, 25ஆவது வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர்.
பல்வேறு அரசியல் கட்சிகளில் அங்கத்துவம் வகித்துள்ள இவர், தற்போது இலங்கை ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.
அமைச்சரவை அந்தஷ்தற்ற அமைச்சர், ராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்துள்ள இவர், கிழக்கு மாகாண சவை உறுப்பினராகவும், இறுதியாக கிழக்கு மாகாண ஆளுநராகவும் பதவி வகித்திருந்தார்.
1963ஆம் ஆண்டு பிறந்த இவர், கல்வித்துறையில் கலாநிதி (முனைவர்) பட்டம் பெற்றுள்ளார்.
இவர் சுயேட்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
பஷீர் சேகுதாவூத்
ஈரோஸ் எனும் ஆயுத இயக்கத்தின் முன்னாள் மூத்த போராளியான பஷீர் சேகுதாவூத் 1989ஆம் ஆண்டு ஈரோஸ் இயக்கத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்ட அவர், அந்தக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைமைக்குரிய தவிசாளர் பதவியை நீண்ட காலம் வகித்தார்.
1989 முதல் 2015ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பஷீர் சேகுதாவூத், பல தடவை பிரதியமைச்சர்களையும், அமைச்சர் பதவியையும் வகித்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகிய அவர், தற்போது ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சியின் தவிசாளராகப் பதவி வகிக்கின்றார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள ஏறாவூர் எனும் பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட பஷீர் சேகுதாவூத் 1960ஆம் ஆண்டு பிறந்தவர்.
சுயேட்சையாகப் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ள இவர், ஆசிரியாகவும் சில காலம் பணியாற்றியுள்ளார்.
இல்லியாஸ் ஐதுரூஸ் முகம்மட்
2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ள இல்லியாஸ், யுனானி மற்றும் ஆங்கிலத்துறை வைத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்துக்கான தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்ட இவர், அந்தத் தேர்தலில் வெற்றி பெறவில்லை.
ஆயினும், 1983ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் 1988ஆம் ஆண்டு வடமேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1945ஆம் அண்டு பிறந்த இவர் - புத்தளம் பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர்.
இவர் சுயேட்சையாகப் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஏ.எச்.எம். அலவி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். அலவி, ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆண்டு வரை, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.
குருணாகல் மாவட்டம் பன்னல பிரதேசத்தைச் சேர்ந்த இவருக்கு 67 வயதாகிறது.
எம்.கே. சிவாஜிலிங்கம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 2001ஆம் ஆண்டு, முதற் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம், அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
ரெலோ இயக்கத்தின் மூத்த உறுப்பினரான இவருக்கு 62 வயதாகிறது.
நகர சபை உறுப்பினராகவும், வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், வடக்கு மாகாணத்துக்கு வெளியிலுள்ள குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈழத் தமிழ் சுயாட்சிக் கழகம் எனும் அரசியல் கட்சியின் தலைவியுமான அனந்தி சசிதரன், சுயேட்சையாகப் போட்டியிடும் சிவாஜிலிங்கத்துக்காக கட்டுப்பணம் செலுத்தினார்.
எஸ். குணரத்னம்
ஊடகவியலாளரான எஸ். குணரத்னம் கொழும்பை சொந்த இடமாகக் கொண்டவர்.
இவரின் பாட்டனார் (தந்தையின் தந்தை) இந்திய வம்சாவழித் தமிழராவார்.
46 வயதுடைய இவர், தற்போது அரச தொலைக்காட்சி நிறுவனமொன்றில் நீதிமன்ற செய்தியாளராகக் கடமையாற்றி வருகின்றார்.
அபே ஜாதிக பெரமுன (எமது தேசிய முன்னணி) எனும் கட்சி சார்பில் இவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.