ஜனாதிபதி தேர்தல்; களத்தில் ஹிஸ்புல்லா;
05 Oct,2019
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமை தொடர்பான சர்ச்சையின் மீது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தொடர்பான கட்டளை இன்று வெளியாகவுள்ள நிலையில், அந்தக் கட்டளை எப்படி அமைந்தாலும், மாற்று வேட்பாளர் ஒருவரைக் கட்டாயம் களம் இறக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தேவையான சபாநாயகரின் உறுதிப்படுத்தல் கடிதங்களை எம்.பிக்கள் இருவர் பெற்றுள்ளனர்.
கோட்டாபய களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சமல் ராஜபக்ச களமிறங்குவார் என்பது உறுதியாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் வேட்பாளர், தற்போதைய அல்லது முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்க வேண்டியது அவசியம்.
நாடாளுமன்ற பொதுச்செயலாளரிடம் அந்த உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்று, தேர்தல்கள் செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நாடாளுமன்ற செயலாளரிடம் இந்த உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்றவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
அதில் தற்போதைய எம்.பிக்கள் குமார வெல்கம, சமல் ராஜபக்ச ஆகியோர் கடிதங்களை பெற்றுள்ளனர்.
முன்னதாக, ஜேவிபி தலைவர் அனுர குமார திஸநாயக்க இதே போன்ற கடிதத்தைப் பெற்றிருந்தார். அனுர எதிர்வரும் தேர்தலில் ஜேவிபி ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குகிறார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் M.L.A.M.ஹிஸ்புல்லா, பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, அனுருத்த போல்கம்போலா மற்றும் சமன் ஸ்ரீ ஹெராத் ஆகியோரும் கடிதங்களை பெற்றுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரஜாவுரிமை வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வருமாயின் சமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவார் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் தனி வேட்பாளரை நிறுத்தாத பட்சத்தில் குமார வெல்கம சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.