திருமணத்துக்காக பதவி உயர்த்தப்பட்ட யோஷித ராஜபக்ச
04 Oct,2019
சிறிலங்கா கடற்படையில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்ட யோஷித ராஜபக்ச, திருமணத்துக்காக லெப்.கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
சிஎஸ்என் தொலைக்காட்சி நிதி முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து, சிறிலங்கா கடற்படையில் இருந்து- கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ஆம் நாள் தொடக்கம், லெப். யோஷித ராஜபக்ச இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் அண்மையில் கோத்தாபய ராஜபக்சவுடன் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடத்திய சந்திப்பை அடுத்து, பணிஇடைநிறுத்தம் செய்யப்பட்ட அதே நாளில் இருந்து லெப். யோஷித ராஜபக்சவை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள கடற்படைத் தளபதிக்கு, உத்தரவிடப்பட்டது.
இதற்கமைய அவரை மீண்டும் கடற்படையில் சேர்த்துக் கொள்ளும் ஆணையில் கடந்த 24ஆம் நாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கையெழுத்திட்டார்.
லெப்.யோஷித ராஜபக்ச தனது திருமணத்தின் போது கடற்படை சீருடையுடன் பங்கேற்க விரும்புவதால், அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கோத்தாபய ராஜபக்ச கோரியிருந்தார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், யோஷித ராஜபக்சவின் திருமணம் இன்று இடம்பெற்றது.
இதற்கு முன்னதாக யோஷித ராஜபக்ச நேற்று லெப்.கொமாண்டராக தற்காலிகமாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் லெப்.கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்திருந்தார்.
இவரது பதவி உயர்வுக்கு பாதுகாப்பு அமைச்சு அங்கீகாரம் அளித்துள்ளது என்றும், தகுதிகாண் பரீட்சையில் சித்தி பெற்ற பின்னர் அவர் நிரந்தரமாக லெப்.கொமாண்டராக தரமுயர்த்தப்படுவார் என்றும் அவர் கூறினார்.
திருமணத்தின் போது, லெப்.கொமாண்டருக்கான பட்டியுடன் கூடிய கடற்படைச் சீருடையையே யோஷித ராஜபக்ச அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.