உலகின் பலம்மிக்க படைகளின் தரவரிசையில் சிறிலங்காவுக்கு 90 ஆவது இடம்
03 Oct,2019
தெற்காசியாவின் ஐந்தாவது பெரிய இராணுவ பலத்தைக் கொண்ட நாடாக, சிறிலங்கா, Global Firepower- 2019 பட்டியலிட்டுள்ளது. உலகின் 137 நாடுகளைக் கொண்ட இந்த தரவரிசையில் சிறிலங்கா 90 ஆவது இடத்தில் உள்ளது.
இதற்கு முன்னர் இருந்த நிலையில் இருந்து சிறிலங்காவின் நிலை மாற்றமடையவில்லை.
தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை அடுத்து, சிறிலங்கா இராணுவமே மிகப் பெரியதாக இடம்பிடித்துள்ளது.
இதனை அடுத்து, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளே இடம்பெற்றுள்ளன. மாலைதீவு இந்த தரவரிசையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
தெற்காசியாவில் படை பல ரீதியாக முதலிடத்தில் உள்ள இந்தியா, அனைத்துலக அளவில் 4 ஆவது இடத்திலும், தெற்காசியாவில் இரண்டாவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அனைத்துலக அளவில் 15 ஆவது இடத்திலும் உள்ளன.
அனைத்துலக அளவில் ஆப்கானிஸ்தான் 74 ஆவது இடத்திலும், சிறிலங்கா 90 ஆவது இடத்திலும், நேபாளம் 120 ஆவது இடத்திலும், பூட்டான் 37 ஆவது இடத்திலும் (கடைசி) உள்ளன.
மரபுவழி ஆயுதங்களுடன் கடல், தரை வான் வழியாக, ஒவ்வொரு நாட்டினதும், போரிடக் கூடியதிறனின் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, சிறிலங்காவில் 281,000 இராணுவப் படையினர் உள்ளனர். சிறிலங்காவிடம், 76 விமானங்களும், 55 உலங்குவானூர்திகளும் உள்ளன.
சிறிலங்காவின் தரைப்படைகளிடம், 210 போர் டாங்குகள், 570 கவச சண்டை வாகனங்கள், 185 ஆட்டிலறிப் பீரங்கிகள், 22 பல்குழல் ரொக்கட் செலுத்திகள் உள்ளன.
கடற்படையிடம் 40 போர்க்கப்பல்கள் உள்ளன என்றும் அந்த Global Firepower தெரிவித்துள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் முதலிடத்தில் அமெரிக்க படைகளும், இரண்டாவது மூன்றாவது இடங்களில் ரஷ்யா மற்றும் சீனாவும் இருக்கின்றன.
முதல் எட்டு பலம்மிக்க நாடுகளின் வரிசையில், இந்தியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.
கடைசி நிலையில் சூரினாம், லைபீரியா, பூட்டான் ஆகிய நாடுகள் உள்ளன.