அமைதிப்படை நடவடிக்கைகளில் இலங்கை படையினரிற்கு தடை விதித்தது ஐநா- சவேந்திர சில்வா நியமனத்தின் எதிரொலி
                  
                     27 Sep,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	
	ஐக்கியநாடுகளின் அமைதிப்படை நடவடிக்கைகளில் இலங்கை படையினர் ஈடுபடுத்துவதை தடை செய்வதற்கு ஐநா தீர்மானித்துள்ளது.
	போர்க்குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள சவேந்திரசில்வா இலங்கையின் புதிய இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டதன் காரணமாகவே ஐநா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
	ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர்களில் ஒருவரான பர்ஹான் ஹன் இதனை தெரிவித்துள்ளார்.
	ஐநாவின் அமைதிப்படை நடவடிக்கைகளில் இலங்கை படையினரை ஈடுபடுத்துவதை ஐநா தடை செய்யும் என தெரிவித்துள்ள அவர் மிகவும் அவசியம் என்றால் மாத்திரமே அவர்களை பயன்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.
	ஐநா அமைதிப்படையில் தற்போது படையாற்றும் இலங்கை இராணுவத்தின் ஒரு பிரிவினரையும் அதிகாரிகளையும் அடுத்தமாதம் முதல் திருப்பி அனுப்புவோம்,சுழற்சி நடவடிக்கைகள் குறித்த திகதியின் அடிப்படையில் இது இடம்பெறும் என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் புதிய இலங்கை படையினரை இணைத்துக்கொள்ளமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
	ஐக்கியநாடுகள் அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு வழங்கிய பங்களிப்பிற்காக இலங்கைக்கு ஐநா நன்றியுடையதாக உள்ளது என தெரிவித்துள்ள அவர் அதேவேளை சவேந்திர சில்வாவிற்கு வழங்கப்பட்ட பதவி உயர்வினால்  ஐநா கவலையடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
	சவேந்திர சில்வா சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களில் ஈடுபட்டார் என நன்கு பதியப்பட்ட நம்பகத்தன்மை மிக்க குற்றச்சாட்டுகள் உள்ளபோதிலும் இலங்கையின் புதிய இராணுவத்தளபதியாக சவேந்திர சில்வாவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டமை குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம் என்பதை இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம் என பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
	அவரது நியமனம் காரணமாக ஐக்கியநாடுகளின் அமைதி நடவடிக்கைகளிற்கான திணைக்களம் இலங்கை படையினரை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை தடை செய்கின்றது என பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.