தெரிவுக்குழுவிடம் இரண்டரை மணி நேரம் சிறிலங்கா அதிபர் சாட்சியம்
23 Sep,2019
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இரண்டரை மணி நேரம் சாட்சியம் அளித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்துக்குச் சென்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடினர்.
சாட்சியமளிப்பாக அல்லாமல்- விளக்கமளிக்கும் ஒரு கலந்துரையாடலாக இந்த நிகழ்வு இடம்பெற்றது. நேற்று முற்பகல் 10 மணிக்குத் தொடங்கிய இந்த சந்திப்பு, பிற்பகல் 1 மணி வரை நீடித்தது.
இதன் போது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா அதிபர் நியமித்த நீதியரசர் விஜித் மலலகொட தலைமையிலான விசாரணைக்குழுவின் அறிக்கையை , தெரிவுக்குழுவிடம் சமர்ப்பித்த சிறிலங்கா அதிபர் தாக்குதலுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பான புலனாய்வு அறிக்கைகள் தனக்கோ அல்லது, அதிபர் பாதுகாப்புப் பிரிவுக்கோ, காவல்துறை மா அதிபர் அல்லது பாதுகாப்புச் செயலர் அல்லது அரச புலனாய்வு சேவை தலைவரால் தெரியப்படுத்தப்படவில்லை என்றும், சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபரின் இந்த சாட்சியங்கள் காணொளிப் பதிவு செய்து கொள்ளப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் அவர் குற்றம்சாட்டினார்.
பூஜித் ஜயசுந்தரவை காவல்துறை அதிபர் பதவிக்கு அவர் தெரிவு செய்தது, ஈஸ்டர் தாக்குதல்களை தவிர்க்க முடியாமல் போனதற்கு ஒரு காரணம் என்றும் சிறிலங்கா அதிபர் கூறியதாக தெரிவுக்கு குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
“ஜயசுந்தரவின் நியமனத்தை நான் எதிர்த்தேன். அவர் என் விருப்பம் அல்ல. நான் அவரை விட மூத்தவரான எஸ்.எம். விக்ரமசிங்கவை காவல்துறை மா அதிபராக நியமிக்க விரும்பினேன். ஆனால் அந்த பதவியில் ஜயசுந்தரவை நியமிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
தாக்குதல்களுக்குப் பிறகு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட பூஜித் ஜயசுந்தர முழு காவல்துறையையும் குழப்பி விட்டார். அவரது நியமனத்தை ஆதரித்த பிரதமர், இந்த வீழ்ச்சிக்கு பொறுப்பேற்க வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.
இதன்போது, தெரிவுக்குழு உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறிலங்கா அதிபரிடம் பல கேள்விகளை எழுப்பினார்.
தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இருந்து பிரதமரை ஏன் விலக்கி வைத்திருந்தீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு, பதிலளித்த அதிபர் சிறிசேன, 1999இல், அப்போதைய அதிபர் சந்திரிகா குமாரதுங்க வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள தகுதியான நபர்களின் பட்டியலில் இருந்து பிரதமரை நீக்கியிருந்தார்.எனினும், பிரதமரை தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள தான் அனுமதித்தேன் என்று கூறினார்.
முன்னதாக இந்த விசாரணைக்குழுவின் மீது நம்பிக்கையில்லை என்றும் தாம் ஒருபோதும் சாட்சியமளிக்கமாட்டேன் என்றும் கூறிய சிறிலங்கா அதிபர் பின்னர் சாட்சியமளிக்க இணங்கினார்.
எனினும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்ற நாடாளுமன்றக் குழு அறையில் சாட்சியமளிக்க அவர் மறுத்திருந்தார்.
இதையடுத்தே சபாநாயகரின் அனுமதியுடன், அதிபர் செயலகத்துக்குச் சென்று சாட்சியங்களை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.
நேற்றைய விசாரணைகள் ஆரம்பித்த போது, சற்று பதற்றமான நிலை காணப்பட்டது என்றும், எனினும் பின்னர் இயல்பான நிலையில் சாட்சியம் அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.