ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிப்பு: பதவிக்காலம், நடைமுறைகள் என்ன?
                  
                     19 Sep,2019
                  
                  
                     
					  
                     
						
	
	 
	
	இலங்கை 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு இன்று புதன்கிழமை வெளியிட்டது.
	இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடத்தப்படும் என இந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.
	ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.
	ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது.
	நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறை
	இலங்கையில் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கு 1981ம் ஆண்டு 15ம் இலக்க சட்டத்தின் இரண்டாம் சரத்துக்கு அமைய ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
	உலகின் பெரும்பாலான நாடுகள் பிரதமர் ஆட்சியை கொண்டிருந்தாலும், இலங்கையை பொறுத்தவரை நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது.
	இலங்கையில் காணப்பட்ட பிரதமர் ஆட்சி முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜே.ஆர்.ஜயவர்தனவினால் 1978ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதி ஆட்சி முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
	இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவர் அரசின் தலைவராகவும், படைகளின் தலைவராகவும் இருத்தல் வேண்டும் என்பது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றாகும்.
	இலங்கை மக்களினால் தெரிவு செய்யப்படும் ஒருவரே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்பதுடன், அவர் ஐந்தாண்டுகள் பதவி வகித்தல் வேண்டும் என்பதும் அவசியமாகின்றது.
	தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க
	
	ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தலும், அவரது பதவிக் காலமும்
	”அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியினால் அல்லது சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருப்பவராயின் அல்லது இருந்தவராயின், வேறேதேனும் அரசியல் கட்சியினால் அல்லது ஏதேனும் தேர்தல் இடாப்பில் தமது பெயரை பதிந்துள்ளவராக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர் இருத்தல் வேண்டும்” என அரசியலமைப்பு குறிப்பிடுகின்றது.
	மக்களினால் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர், மற்றுமொரு முறை அந்த பதவிக்கு மக்களால் தெரிவு செய்ய முடியாது என அரசியலமைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
	பதவியிலுள்ள ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஒரு மாதத்துக்கு குறையாமலும் இரண்டு மாதங்களுக்கு மேற்படாமலும் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெறுதல் வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.
	இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள்
	
	இந்த நிலையில், 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டதன் பின்னர், 1982ம் ஆண்டு முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட்டது.
	இதன்படி, 1982ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
	அதனைத் தொடர்ந்து, 1989ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணசிங்க பிரேமதாஸ நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யபபட்டார்.
	ரணசிங்க பிரேமதாஸ தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த நிலையில், தேர்தல் ஒன்று நடத்தப்படாமல் அவரது பதவிக்கு டி.பி.விஜயதுங்க நியமிக்கப்பட்டிருந்தார்.
	டி.பி.விஜயதுங்கவின் பின்னரான காலப் பகுதியில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இரண்டு தடவைகளும், மஹிந்த ராஜபக்ஸ இரண்டு தடவைகளும் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தனர்.
	இறுதியாக 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு ஆட்சியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.