இலங்கையில் இருந்து வெளிநாடு செல்ல முயற்சித்த தந்தை - மகன் கைது
18 Sep,2019
போலி விசாவை பயன்படுத்தி இலங்கையில் இருந்து ஜப்பானுக்கும், அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கும் செல்ல முயற்சித்த ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டு தந்தை மற்றும் மகனை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
51 வயதான ஈரான் பிரஜை ஈரானில் பூ சம்பந்தப்பட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதுடன் 15 வயதான மகன் அந்த நாட்டில் கல்வி கற்று வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனைப்பகுதியில் உள்ள குடியகல்வு அதிகாரியிடம் தமது கடவுச்சீட்டை கையளித்துள்ளனர்.
அதில் காணப்பட்ட மாற்றங்களை அவதானித்த அதிகாரி, கடவுச்சீட்டுக்களை பிரதான அதிகாரியிடம் அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து விசாவை பரிசோதனை செய்வதற்காக விமான நிலையத்தில் உள்ள எல்லை கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டுக்களில் உள்ள விசாக்களை கணனியில் பரிசோதித்த போது, அது போலியானது என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களின் பயண பொதியை சோதனையிட்ட போது அதில் தெளிவற்ற விமான பயண வழிகளுடன் கூடிய இரண்டு பயணச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த ஈரானியர் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பி வைக்கும் நபர்களிடம் சிக்கியுள்ளனர் என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்