ஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – 
                  
                     18 Sep,2019
                  
                  
                     
					  
                     
						
	
	 
	அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.
	பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.
	சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போதே அவர் இந்த உறுதிமொழியினை வழங்கினார் என தெரிவிக்கப்படுகின்றது.
	மேலும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்தித்து பேசிய பின்னரே, யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக அறிவிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார்.
	மேலும் கடந்த காலங்களை போலவே இனிவரும் காலங்களில் அபிவிருத்தி பணிகள் தொடரும் என ரணில் விக்கிரமசிங்க இதன்போது உறுதியளித்துள்ளார்.
	அத்தோடு இந்த சந்திப்பின்போது கல்முனை விவகாரத்தில் முன்பு வழங்கிய வாக்குறுதியை செயற்படுத்தவில்லை என கூட்டமைப்பு உறுப்பினர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டினர்.
	இதற்கு பதிலளித்த பிரதமர், எல்லை மீள்நிர்ணய பணிகள் நடந்து வருவதாகவும், கல்முனையை தரமுயர்த்தும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் வாக்குறுதி வழங்கினார்.