நான் களமிறங்குவேன்: முடியாவிடின் அரசியலை விட்டு வெளியேறுவேன்; ஐ.தே.க. மூத்த உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் தெரிவிப்பு
14 Sep,2019
நெருக்கடியான அனைத்து சந்தர்ப் பங்களிலும் கட்சியைப் பாதுகாத்த தலைவர் என்ற வகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டுவேன், அவ்வாறு முடி யாவிடின் வெளியேறுவேன்.
70 வயது வரையிலும் இலங்கை அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்த எனக்கு தேசிய அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது கடினமான விடயமல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
களனி மற்றும் பியகம தேர்தல் தொகுதிகளின் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், இலங்கை அரசியல் வரலாற்றில் ஐக்கிய தேசிய கட்சி தனது தலைவர்களை இழந்து நெருக்கடியான நிலைகளை எதிர்க்கொண்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் கட்சியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய எனது செயற்பாடுகளை மூத்த உறுப்பினர்கள் யாரும் மறந்து விட முடியாது.
அரசியல் ரீதியில் கட்சி வீழ்ச்சிகளை சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சியின் மறுமலர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமாக செயற்பட்டேன் .
கட்சி தலைவர் என்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலான கூட்டணிகளை வெற்றிப்பெற செய்வதில் கடந்த காலங்களில் தியாகத்துடன் செயற்பட்டிருந்தேன்.
எதிர் காலத்திலும் எமது கட்சியை தலைமைத்துவமாக கொண்ட கூட்டணியை வெற்றிப்பெற செய்வதில் பொறுப்புணர்வுடன் உறுதியாக இருக்கின்றேன்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்று கட்சிக்கான எனது கடமையை நிறைவேற்ற முடியா விடின் வெளியேறி விடுவேன். இது எனக்கு கடினமான விடயமல்ல.
நாட்டிற்கு மாத்திரமல்ல ஐக்கிய தேசிய கட்சிக்கும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலானது மிகவும் முக்கியமானதொன்றாகும். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி பணிகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகள் என்பன நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.
எனவே முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை தடையின்றி முன்னெடுக்க வேண்டுமாயின் மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டும்.
நாட்டு மக்களும் எம் மீது நம்பிக்கை வைத்து எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஆகவே ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ள கூட்டணியை விரைவில் அமைத்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கான நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுப்படப்போவதாகவும் பிரதர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.