அங்கீகாரம் வழங்குங்கள்: ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை
14 Sep,2019
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்கள் உட்பட பல சவால்களுக்கு மத்தியில் தங்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரத்தினை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கை கோரியுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது அமர்வில், ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் துணை நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ் ஆற்றிய உரையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “காணாமல் போனவர்கள் குறித்த ஒரு சுயாதீன அலுவலகம் 2016இல் நிறுவப்பட்டு, 2018இல் முழுமையாக செயற்படுத்தப்பட்டது.
மேலும், மனித உரிமைகள் அல்லது மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தனிநபர் மற்றும் கூட்டு இழப்பீடுகளை வழங்குவதற்காக, இழப்பீட்டுக்கான அலுவலகம் 2018ஒக்டோபரில் நிறுவப்பட்டது.
காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் காணாமல் போனவர்களின் பெயரில் சில வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு உதவும் முகமாக, இறப்புச் சான்றிதழ்களுக்குப் பதிலாக, தற்போது உடனில்லாத சான்றிதழ்களை வழங்குவதற்கான செயற்பாடு சட்டத் திருத்தத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் அதன் இடைக்கால அறிக்கையில் மேற்கொண்ட பரிந்துரைக்கிணங்க, தற்போது உடனில்லாத சான்றிதழைக் கொண்டுள்ள காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு, 6ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவை எதிர்வரும் ஒக்டோபர் முதல் வழங்குவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்தோடு, காணாமல் போன மற்றும் காணாமலாக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களை ஆதரிப்பதற்காக 2019ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்டத்தில், 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படவுள்ளது.
அதேநேரம், உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு பின்னர் இலங்கை பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்த போதிலும், அனைத்து பிரஜைகளினதும் மனித உரிமைகளின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பை செயற்படுத்த உதவும் கொள்கைகளுக்கான ஈடுபாட்டினை அடிக்கோடிட்டுக் காட்டுவது மிகவும் முக்கியமானதாகும்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இலங்கை எந்த அளவில் முக்கியத்துவமளிக்கின்றது என்பதனை இந்த விடயங்கள் குறித்து நிற்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக எழுந்த பல்வேறு சவால்களுக்கு மத்தியில், இந்த விடயத்தில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றமானது, அனைவருக்கும் மனித உரிமைகளை உறுதி செய்வதற்காக இலங்கை பேணி வந்த மற்றும் தொடர்ந்தும் பேணி வருகின்ற வலுவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.