உள்நாட்டு முடிவுகளில் வெளிச் சக்திகள் தலையிட வேண்டாம் -ஐ.நா.வில் இலங்கை திட்டவட்டம்!
                  
                     12 Sep,2019
                  
                  
                     
					  
                     
						
	
	இலங்கையின் உள்நாட்டு முடிவுகள் தொடர்பாக வெளிச் சக்திகளின் தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது.
	ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடரில், நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமர்விலேயே ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஏ.எல்.ஏ.அஸீஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
	இலங்கையின் இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து இணை அனுசரணை நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் கவலை வெளியிட்டிருந்தன.
	குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டது நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை பாதிக்கும் என்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
	இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஏ.எல்.ஏ.அஸீஸ் பேரவையில் மேற்குறிப்பிட்டவாறு கருத்து வெளியிட்டார்.
	அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்ளக நிர்வாக செயன்முறைகளை பாதிக்கும் வகையில் இலங்கையின் பொது சேவை பதவி உயர்வுகள், முடிவுகளில் வெளிப்புற சக்திகளின் தலையீடுகள் தேவையற்றவை. அவை ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.
	அண்மையில் இராணுவத் தளபதி நியமனம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இறையாண்மைக்குட்பட்டது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
	குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சில இருதரப்பு பங்காளிகள் மற்றும் அனைத்துலக நிறுவனங்கள் இந்த நியமனம் குறித்து கவலைக்குரிய நிலைப்பாட்டை எழுப்புவது வருந்தத்தக்கது. இயற்கை நீதிக்கான கொள்கைகளுக்கு முரணானது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.