சஹ்ரானின் மடிக்கணினியிலிருந்து சிக்கியுள்ள முக்கிய பல தகவல்கள்
                  
                     07 Sep,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	
	 
	
	உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரி மொஹமட் சஹ்ரான் பயன்படுத்தியதாக கூறப்படும்  மடிக்கணனியில் இருந்து பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
	குறித்த  மடிக் கணினி  தற்போது சி.ஐ.டி. பொறுப்பில் உள்ளதாகவும், அது சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு அறையில் விஷேட பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
	குறித்த  மடிக் கணினி, அமெரிக்காவின் எப்.பி.ஐ. எனப்படும் மத்திய விசாரணைப் பிரிவினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக  சிலர் தகவல்களை பரப்பி வரும் போதும், அந்த மடிக்கணினி சி.ஐ.டி. பொறுப்பிலேயே உள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர உறுதி செய்தார்.
	பயங்கரவாதி மொஹமட் சஹ்ரானின் கல்முனை பகுதி தொடர்பாளராக செயற்பட்ட கல்முனை சியாம் என அறியப்படும்  சாவுல் ஹமீட் ஹமீஸ் அல்லது  அபூ ஹசன் என்பவரிடம்  மேற்கொள்ளப்பட்ட தடுப்புக் காவல் விசாரணைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், தேசிய உளவுத்துறை தகவல்களை மையப்படுத்தி சஹ்ரானின் மடிக்கணினி கடந்த மே 31 ஆம் திகதியன்று மீட்கப்பட்டது.
	கடந்த  மே 22 ஆம் திகதி,  தேசிய உளவுத் துறையின் தகவல்களை மையப்படுத்தி அம்பாறை வலய சிறப்பு  பொலிஸ் குழு கல்முனை சியாம் எனும் சஹ்ரானின் பிரதான தொடர்பாளரைக் கைது செய்திருந்தது.  அதன் பின்னர் குறித்த நபரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான தடுப்புக் காவலில் வைத்து  விசாரணைகளை  பொலிஸார் ஆரம்பித்தனர்.
	 அதன்படி கடந்த மே 28,29 ஆம் திகதிகளில்  5,10 இலட்சங்கள் என்ற ரீதியில் 15 இலட்சம் ரூபா பொலிஸாரால் முதலில் மீட்கப்பட்டிருந்தது.
	அதனையடுத்தே மே 31 ஆம் திகதி  கல்முனை  சியாமின்  மனைவியின் வீட்டில் இருந்து மேலும் 35 இலட்சம் ரூபா  கைப்பற்றப்பட்டது.
	 கல்முனை சியாமிடம்  முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் பயங்கரவாதி சஹ்ரான் பயன்படுத்தியதாக கூறப்படும் மடிக்கணனி ஒன்று அக்கரைப்பற்று – பாலமுனை களப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.
	 பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரர்களில் ஒருவரான மற்றொரு பயங்கரவாதி சைனிக்கு சொந்தமான  பென் ட்ரைவ் ஒன்றும், வன் தட்டொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்த நிலையில் கல்முனை சியாமிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளிலேயே  மடிக்கணனி தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
	சி.ஐ.டி. பயங்கரவாதி சஹ்ரானின் மடிக்கணினி மற்றும் பயங்கரவாதி சைனியின் பென் ரைவ் உள் ளிட்ட வற்றை பொறுப்பேற்று பகுப்பாய்வு செய்து பல தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளமையும் குறிப் பிடத்தக்கது.