தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகம் புதைப்பு ; தணிந்தது மட்டு.வில் உண்டான பதற்றம்
                  
                     28 Aug,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	மட்டக்களப்பு  சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை மட்டு கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிசார் புதைத்ததை எதிர்த்து பொதுமக்கள் இன்று மாலை ஏற்பட்ட பதற்றமான சூந்நிலை தற்போது தணிந்துள்ளது.
	கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயித்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டுதாக்குதலில் சிதறிக் கிடந்த தலை மற்றும் உடற்பாகங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது
	இந்த உடற்பாகங்கள் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட 34 வயதுடைய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது ஆசாத் என்பவரின் என டி.என்.டி பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது
	இதனையடுத்து குறித்த உடற்பாகங்களை  பொது மயானத்தில் அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதனை கடந்த ஜூன் 11 ஆம் திகதி மட்டக்களப்பு புதூர் ஆலையடி மயானத்தில் புதைக்க பொலிசார் முற்பட்டபோது பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தததையடுத்து அங்கு புதைப்பது கைவிடப்பட்டது
	தொடர்ந்து கள்ளியங்காடு மயானத்தில் புதைக்க முற்பட்டபோது பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தினால் அதுவும் கைவிடப்பட்ட நிலையில் காத்தான்குடியில் பிரதேசத்தில் புதைக்க முற்பட்டபோது அங்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தால் கைவிடப்பட்டது.
	இந்த நிலையில் தொடர்ந்தும் உடற்பாகங்கள் வைத்தியசாலை பிரேத அறையில் இருந்துள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை கள்ளியங்காடு இந்து மயானத்தில் குறித்த உடற்பாகங்களை பொலிசார் புதைத்துள்ளனர்
	இது தொடர்பாக பிரதேச மக்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை மாலை தெரியவந்ததையடுத்து குறித்த மயானத்துக்கு முன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டு வீதியில் அமர்ந்து உடனடியாக புதைக்கப்பட்ட உடற்பாகங்களை தோண்டி எடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்
	இதனையடுத்து அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு தரப்பினர் பலத்த பாதுகாப்பில் ஈபட்டிருந்தன். இந் நிலையில் அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் நாளை சம்மந்தப்பட்ட தரப்புகள் ஒன்று கூடி இது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதாக தீர்மானம் மேற்கொண்டதை தொடர்ந்து அப் பகுதியில் உண்டான பதற்ற நிலை தற்போது தணிந்துள்ளது.
	இதேவேளை பொலிஸார் பதற்றத்தை கட்டுப்படுத்த மேற்கொண்ட தாக்குதலின் போது சிலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது