ஒன்றரை வருடத்தில் 6 வீடுகளில் அனைத்து வீடுகளிலும் கொடுமைப்படுத்தப்பட்டேன்:
24 Aug,2019
குவைத்துக்கு பணிப் பெண்களாகச் சென்று, அங்கு தாங்கள் தொழில் புரிந்து வீடுகளில் பல்வேறு வகையான கொடுமைகளுக்கு உள்ளான இலங்கையைச் சேர்ந்த 60 பெண்கள் நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.
குவைத்திலிருந்து நேற்றுக்காலை 6.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த யூ.எல். 230 என்ற விமானத்தில் இலங்கை வந்துள்ளனர்.
இவர்கள் கொடுப்பனவு மற்றும் உணவு கிடைக்காமை, காலை முதல் மறுநாள் காலை வரையில் வேலை, தாக்குதல்கள் மற்றும் இன்னும் பல கொடுமைகளுக்கு ஆளான பெண்களே இவ்வாறு அந்நாட்டிலிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தமக்கு செய்விக்கப்பட்ட கொடுமைகளை பொறுத்துகொள்ள முடியாமல் தாம் பணியாற்றிய வீடுகளிலிருந்து தப்பிச்சென்று, குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
நாடு திரும்பிய 60 பெண்களில் சிலர் தாம் முகங்கொடுத்த இக்கட்டான சூழ்நிலை தொடர்பில் பின்வருமாறு கூறினார்.
அவர்களில் காலியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், நான் குவைத் சென்றிருந்த ஒன்றரை வருடங்களில் 6 வீடுகளில் பணியாற்றினேன்.
அந்த ஒவ்வொரு வீடுகளிலும் என்னைக் கொடுமைப்படுத்தியபோது, நான் முகவரகத்தக்கு (ஏஜென்ஸி) அறிவித்தேன்.
அவர்கள் என்னை வேறு வீடுகளுக்கு மாற்றினர். ஒவ்வொரு வீடுகளிலும் உள்ளவர்கள் நான் வைத்திருக்கும் பணத்தை அபகரித்து, என்னை அடித்து துன்புறுத்தி வேலை வாங்குவார்கள்.
பின்னர் சவூதியிலுள்ள வீடு ஒன்றுக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து மீண்டும் குவைத்து அனுப்பப்பட்டு அங்குள்ள வீடு ஒன்றில் பணியாற்றினேன். உணவு உண்டால் என்னை ஏசுவார்கள். அணிவதற்கு மாற்று உடை இல்லை என்றார்.
மாத்தளையைச் சேர்ந்த 32 வயதான திருமணமான பெண் ஒருவர் தனது அனுபவத்தை பின்வருமாறு விபரித்தார்.
நான் 2017.09.09 இல் குவைத் சென்றேன். பிள்ளை பராமரிப்புக்கு என்றே என்னை அழைத்துச் சென்றனர்.
எனினும், வீடுகளில் வளர்க்கப்பட்ட கோழிகள் மற்றும் ஆடுகளை பராமரிக்கும்பணியே வழங்கப்பட்டது.
சோறுடன் தக்காளி சோஸை மாத்திரம் தினமும் உணவாக வழங்குவர். இவற்றை தாங்க முடியாததொரு கட்டத்தில் அதிகாலை 3 மணியளவில் இலங்கை தூதரகத்துக்கு தப்பிச்சென்றேன்.
சொந்த நாட்டில் தங்களது பிள்ளைகளுடன் சம்பலும் சோறும் உண்டாலும் பரவாயில்லை. வெளிநாடு சென்று துன்பப்படவேண்டாம் என எம்நாட்டு பெண்களுக்கு கூறிக்கொள்கிறேன் என்றார்.
அவரைத் தொடர்ந்து நிவரெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான பெண் ஒருவர் தெரிவிக்கையில்,
எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குருணாகலிலுள்ள முகவர் நிலையம் ஒன்றின் ஊடாக நான் குவைத்துக்கு அனுப்பப்பட்டேன்.
தாக்குதலால் என் முகத்தில் வீக்கமும், காயமும் இன்னும் அப்படியே உள்ளன. அடிபட்டுக்கொண்டே 5 மாதங்கள் பணியாற்றினேன்.
முடியாத கட்டத்தில் குருணாகலிலுள்ள ஏஜென்ஸியை தொடர்புகொண்டேன். நாங்கள் உங்களை குவைத்துக்கு அனுப்பவில்லை என அவர்கள் பதிலளித்தனர். குவைத்திலுள்ள ஏஜென்ஸிக்கும் தெரியப்படுத்தினேன்.
அவர்களும் பொருட்படுத்தவில்லை. இவ்வாறானதொரு சூழலில் இலங்கை தூதரகத்துக்கு சென்று, அவர்களின் உதவியால் மீண்டும் நாடு திரும்பினேன் என்றார்.
குருணாகலைச் சேர்ந்த 23 வயதான பெண்ணொருவர் கூறுகையில்,
எனக்கு தெரிந்தவரொருவரின் ஊடாக நான் கடந்த 2018.10.23 ஆம் திகதி குவைத் சென்றேன்.
அழகுக்கலை நிலையமொன்றில் தொழிலுக்காக என என்னை அனுப்பினர். எனினும், மூன்று மாடிகளைக் கொண்ட வீடு ஒன்றுக்கு என்னை வீட்டு வேலைக்கு அமர்த்தினர்.
இலங்கையில் இருக்கும்போது, 110 குவைத் தினார் கொடுப்பனவு தருவதாகக் கூறினர் எனினும், 90 குவைத் தினாரே வழங்கப்பட்டது.
காலை 6 மணிக்கு நித்திரைவிட்டெழுவேன். அதிலிருந்து மறுநாள் அதிகாலை 3 அல்லது 4 மணிவரை வேலைசெய்யவேண்டும். உறங்குவதற்கோ, உண்பதற்கோ நேரம் இல்லை. பிள்ளைகளினதும், பெரியவர்களினதுமாக முடிவில்லாத வேலை.
இவற்றை பொறுத்துக் கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் அங்கிருந்து தூதரகத்துக்கு தப்பிச்சென்றேன்.
இங்குள்ள பெண்கள் குவைத்துக்கு செல்லவேண்டாம். இலங்கையில் வாழமுடியாவிட்டால், ஏதாவது சுயதொழில் செய்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்றார்.
இந்நிலையில், நாடு திரும்பிய பெண்கள் அனைவரும் விமான நிலையத்திலுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகத்தினால் வழங்கப்பட்ட போக்குவரத்து கொடுப்பனவுகளைப் பெற்று மீண்டும் தங்களது வீடுகளை நோக்கி பயணமாகினர்.